ஹஜ் பயணிகளை தேர்வு செய்ய 15-ம் தேதி குலுக்கல்


 

2012-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகளைத் தேர்வுசெய்ய மே 15-ம் தேதி குலுக்கல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 

ஹஜ் 2012-ல் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழ் நாட்டைச் சேர்ந்த 12,000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள், தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3000 மட்டுமே.

 

எனவே, மத்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, ஹஜ் 2012-ற்கான புனிதப் பயணிகளைத் தெரிவு செய்ய, குலுக்கலை நடத்த தமிழ் நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி 15.05.2012 அன்று மாலை 3.00 மணியளவில், இராயப்பேட்டை, புதுக் கல்லூரி வளாகத்திலுள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

 

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக ஹஜ் 2012-ல் ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள், இக்குலுக்கலில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.