கோட்டக்குப்பத்தில் கருங்கல் தடுப்புச்சுவர்- சட்டசபையில் அமைச்சர் தகவல்


விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில்கடல் அரிப்பைத் தடுக்க, 20.71 கோடி ரூபாயில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கப்படும்” என, பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்து பேசியதாவது:மத்திய அரசின், 13வது நிதிக் குழுவின் கீழ் நிதி உதவி பெறும் வகையில், கடலோர பாதுகாப்பு பணிகளுக்கு, 2011-12 முதல் 2014-15 நிதி ஆண்டு வரை, 196.64 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், 2011-12 நிதி ஆண்டில், 46.9385 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட, கோட்டகுப்பம்சின்ன முதலியார்பட்டி கிராமத்தில் கடல் அரிப்பைத் தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்க, 20.71 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நடுக்குப்பம், கடற்கரையோர பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்க, உரிய மதிப்பீடுகள் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளரிடம் கோரப்பட்டுள்ளன. இந்த மதிப்பீடுகள் வந்தவுடன், திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.வி.ராமலிங்கம்கூறினார்.

Advertisements