ஏணிக்குச் சிக்கலா? போராடும் முஸ்லீம் லீக் வாரிசுகள்


சுதந்திரப் போராட்ட வரலாறும், பாரம்பரியமும்கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து, ஏணிச் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. ‘தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது’ என்று, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் ஃபாத்திமா முஸாஃபர். 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியச் செயலாளரும், தமிழ் மாநில அமைப்பாளருமான பேராசிரியர் காதர் மொய்தீனிடம் பேசினோம். ”1906-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், வேலை வாய்ப்பு, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றில் முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, முகமது ஷாஹ் ஆகாகான் என்பவரைத் தலைவராகக்கொண்டு உருவாக்கப்பட்டது அனைத்திந்திய முஸ்லீம் லீக். சுதந்திர இந்தியாவில் அது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்காக மாற்றம் பெற்றது. அதன் முதல் தலைவராக இருந்தவர், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்.

பல்வேறு மாநிலங்களில் இயங்கிவந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அந்தந்த மாநிலக் கமிட்டிகளாகவே இருந்தன. மற்ற மாநிலங்களைவிட கேரளக் கமிட்டி முஸ்லீம் லீக், அதிகச் செல்வாக்குடன் உள்ளது. முஸ்லீம் லீக் கேரளக் கமிட்டியின் சார்பில் 20 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அதனால், அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே பெயரில் இந்தியா முழுக்கச் செயல்படத் தீர்மானித்தோம். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக முயற்சி செய்தோம். எங்கள் ஆவணங்களையும் விளக் கங்களையும் பரிசீலித்த தேர்தல் ஆணையம், கடந்த 3-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கை அங்கீகரித்து, ‘ஏணி’ சின்னத்தை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பை அனைத்து மாநிலத் தேர்தல் ஆணையர்களுக்கும் அனுப்பி உள்ளது.

இனிமேல், எந்தத் தேர்தல் வந்தாலும், எந்தக் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்துக்கொண்டாலும், ஏணிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். ஆனால், நாங்கள்தான் உண்மையான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்று கூறிக்கொண்டு, எங்களின் சின்னங்களையும் கொடிகளையும் சிலர் தவறாகப் பயன்படுத்தி வந்தனர். இனிமேல் அப்படி யாரும் செய்ய முடியாது. அத்துமீறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்போம்” என்று எச்சரிக்கை செய்தார்.

இதனை எதிர்த்து ஃபாத்திமா முஸாஃபரும் தாவூத் மியாகானும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.  இதில் ஃபாத்திமா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முன்னாள் தலைவர் அப்துல் சமதுவின் மகள். தாவூத் மியாகான், காயிதே மில்லத்தின் பேரன்.

தேர்தல் ஆணையம் இவர்களது புகாரை ஏற்றுக்கொள்ளாததால், உச்ச நீதிமன்றத்துக்குப் போயிருக்கும் ஃபாத்திமா, ”கேரள ஸ்டேட் கமிட்டியுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை இணைத்தது சட்டவிரோதம்.

கேரள அமைச்சர் அகமதுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நாங்கள்தான் உண்மையான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்று நிரூபிப்போம்” என்று முழங்கினார்.

வாரிசுகள் வெல்வார்களா?

நன்றி : விகடன்
Advertisements