மறைந்த பாரூக் மரைக்காயருக்கு – வேண்டாம் சிலை ?


கேரள முன்னாள் ஆளுனர் பாரூக் மரைகாயர் அவர்களுக்கு  புதுவையில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு மூலம் முஸ்லிம்களுக்கு ரங்கசாமி அதிர்ச்சி கொடுத்துள்ளார். உலக முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முஸ்லிம்கள் சிலை வைக்கவில்லை. 

 

சிலைகளே கூடாது என்று கூறும் மார்க்கம் இஸ்லாம்.  ஆனால் இஸ்லாமியப் பெயர் உள்ள சிலர் , ஈமானை சரியாக உணராதவர்கள் கட்சிகளில் ஈடுபட்டு சிலைக்கு மாலையிட்டு, இறைநிராகரிப்புக்கு ஆளாகிக் குற்றவாளியாக மாறி சமுதாயத்துக்கு இழுக்கை உண்டாக்கித் தங்களின் வாழ்நாளில் பெரிய நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். அண்மைக் காலமாக அரசியல் கட்சிக்காரர்கள் தங்களுடைய தலைவர்களின் விசேட நாள்களில் அவர்களுக்கு மரியாதை செய்வதாகக் குறிப்பிட்டு ‘வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்’ என்று விளம்பரங்களின் மூலம் தெரிவிக்கிறார்கள். பல்வேறு வகைகளில் பலதெய்வ வணக்கக்காரர்கள் பத்தோடு பதினொன்றாக வணங்குவது பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

 

 

ஆனால் ஏக தெய்வ வணக்கமுள்ள, ஒரே இறைவனை மட்டுமே வழிபட வேண்டிய முஸ்லிம் பெயருள்ளவர்கள் இப்படி ‘வணங்குவது’  பெரிய பாதகமாகும். ஈமான் கொண்டு இறைவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டுள்ள முஸ்லிம்கள் இவ்வாறு வணங்குவதை விட்டுவிட்டு,  மற்றபடி தங்கள் தலைவர்களை வரம்புக்கு உட்பட்டுப் புகழ்வதில் தப்பில்லை. மேலும் நீண்ட காலமாக ‘இதய தெய்வம்’ என்ற ஒரு வார்த்தையையும் சில அறியாத முஸ்லிம்கள் சொல்லி வருவதுண்டு.  இதுவும் அறியாமையே.  இதயத்துக்கு ஒரு தெய்வம், மனதுக்கு ஒரு தெய்வம், உடலுக்கு ஒரு தெய்வம் என்றெல்லாம் முஸ்லிம்கள் சொல்ல முடியாது. சொல்வது பெரிய அறியாமையாகும். 
பாரூக் மரைகாயர் மேல் அனைவரும் நல்ல மதிப்பு வைத்து உள்ளார்கள், குறைந்த வயதில் புதுச்சேரி முதல் அமைச்சர் ஆகி, மேலும் மத்திய அமைச்சர், சவுதி அரேபியாவின் இந்திய தூதர், சடிஸ்கர் மற்றும் கேரளா ஆளுனர் என்று கடைசி காலம் வரை அதிகாரத்தில் இருந்தவர். முஸ்லிம்களுக்கு பிடிக்காத செயலான சிலை வைப்பதை விட்டு விட்டு, அவர் பெயரில் மாணவர்களுக்கு உதவித் தொகை மற்றும் காரைக்காலில் உள்ள நுழைவு வாயிலுக்கு அவரது பெயர் சூட்டப்படுவது நல்ல விஷயம். 

 

மறைந்த பாரூக் மரைகாயர் அவர்களுக்கு சிலை வைக்கும் முடிவை புதுவை முதல்வர் ரங்கசாமி மறு பரிசிலனை செய்ய வேண்டுகிறோம்.

Advertisements