E.C.R தொடரும் தடைகள் ?


கிழக்கு கடற்கரை சாலையின், இணைப்பு சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னை பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில், கிழக்கு கடற்கரை சாலை உதயமானது.

சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டது.கடற்கரையோரமாக இயற்கையான சூழலில் அமைந்துள்ளதால், இந்த சாலை வழியாக சென்னைக்கு செல்ல பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதனால், 24 மணி நேரமும் வாகன நடமாட்டம் மிகுந்த சாலையாக உருவெடுத்துள்ளது.போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை வழியாக புதுச்சேரி நகரை கடந்து செல்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் நகரில் பெரும் பிரச்னையாக எழுந்துள்ளது. மேலும், இந்த சாலையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுமார் 2 மணி நேரத்தில் பறந்துவரும் வாகனங்கள், புதுச்சேரி நகருக்குள் நுழைந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி, கடந்து செல்வதற்கு அரை மணி நேரத்துக்கும் மேலாகி விடுகிறது.எனவே, நகரத்துக்குள் வாகனங்கள் வருவதை தவிர்க்கும் வகையில், கோட்டக்குப்பத்தில் இருந்து கருவடிக்குப்பம் வரை, பைபாஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறையும் ஒப்புதல் அளித்தது.கோட்டகுப்பம்-கருவடிக்குப்பம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைபாஸ் சாலை அமைப்பதற்காக, கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம், 11 கோடியே 4 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. புதிய சாலை அமையும் வழியில் தமிழக பகுதியான சின்னகோட்டகுப்பம் மற்றும் புதுச்சேரி பகுதியான லெனின் நகர் உள்ளது.விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு, நில ஆர்ஜிதம் செய்யும் பணி நடந்தது.

 

 

 

தமிழகப் பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் பலர், அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை குறைவாக இருக்கிறது என்று இடத்தை தர எதிர்ப்பு தெரிவித்தனர்.வானூர் தாசில்தார் மூலம், இடத்தின் உரிமையாளர்களிடம் மாற்று இடம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறி, (இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை) இடத்தை சமீபத்தில் கையகப்படுத்தி, இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிட்டனர். இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதால், தமிழக பகுதியிலுள்ள வீடுகள் இடிக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியின் லெனின் நகரில் இதுவரை இடம் கையகப்படுத்தப்படவில்லை. இங்கு வசிக்கும் 20க்கும் மேற்பட்டவர்கள், தங்களுக்கு மாற்று இடம் கொடுத்தால்தான் இடத்தை காலி செய்து தருவோம் என, எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பைபாஸ் சாலை பணியை மேற்கொள்ள முடியவில்லை. தமிழக பகுதியில் சாலை அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துவிட்ட நிலையில், புதுச்சேரி பகுதியில் வீடுகளை காலி செய்யாததால், பைபாஸ் சாலை பணி அரைகுறையாக நிற்கிறது. கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த பணியை முடிக்க திட்டமிட்டு இருந்தது. காலக்கெடு முடிந்து 7 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை திட்டம் நிறைவு பெறாமல் உள்ளது. பைபாஸ் சாலை பணிகளை விரைந்து முடித்து, போக்குவரத்துக்கு திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.