எங்க ஊர் குளத்தை காணும் ?


நமதூருக்கென்று வரலாற்று பாரம்பரியங்கள் நிறைய இருப்பினும் அவற்றில் பலவற்றை நாம் பாதுகாக்க தவறி விடுகிறோம்.  பிற்காலங்களில் தவறவிட்ட அடையாளங்களுக்காக ஏங்குகிறோம்.

 கோட்டகுப்பம்  சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகின்றது என்பது உண்மை.  புதிய வளர்ச்சி காணும் அதே வேளையில் பழைய பயன்பாடுகளையும் நாம் பாதுகாத்தாக வேண்டும்.   குறிப்பாக கோட்டகுப்பத்தின் நீர் நிலைகள்.   குளங்கள், கிணறுகள், வாய்க்கால்கள் போன்ற இயற்கைக்கு இறைவனளித்துள்ள பெரிய அருட்கொடைகளை நாம் பாதுகாக்கத் தவறினால் அதன் தீய விளைவுகளை நம் சந்ததிகளுக்கு நாம் கொடுத்து சென்றவர்களாக தூற்றப்படுவோம்.

பள்ளிவாசல்களை உருவாக்கிய முஸ்லிம்களாகட்டும்.  கோயில்களை கட்டிய பிறராகட்டும் இவர்கள் அனைவருமே ஆரம்பகாலத்தில் நீர் நிலைகளின்றி இணைத்தே உருவாக்கினார்கள்.   தண்ணீர் உயிர்வாழ்வின் முக்கிய ஆதாரம் என்றுணர்ந்தவர்கள் அதை ஆன்மீக அடையாளங்களுடன் பாதுகாத்தார்கள்.  அவை கிணறுகளாகவோ, குளங்களாகவோ, குட்டைகளாகவோ காட்சியளிக்கும்.

நமதூரைப் பொருத்தவரை புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிகளைத் தவிர்த்து பழைய பள்ளிவாசல்கள் அனைத்துமே குளங்களை தனது சொத்தாக்கிக் கொண்டுள்ளன.  ஆனால் இன்றைக்கு கோட்டக்குப்பத்தில் எத்துனைக் குளங்கள் நிர்வாத்தினரால் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன? என்று ஒரு கேள்வியை வைத்தால் கிடைக்கும் விடை என்னவோ “ஒன்றுக் கூட இல்லை” என்பதுதான்.

 

தனி நபர் நலனை விட ஊர் நலன், சந்ததிகளின் நலன் காப்பது முக்கியம்.  ஒரு புறம் கடல் நீர் கோட்டகுப்பத்தை கபகளிரம் செய்து வருகிறது. ஒரு காலத்தில் சில அடிகள் நோண்டினால் நல்ல சுவையான தண்ணீர் வந்தது, இப்போது பல அடிகள் நோண்டினாலும் நல்ல தண்ணீர் கிடைப்பது கிடையாது. நம்மை சுற்றியுள்ள கிணறுகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளையும் நாம் பாழ்படுத்தி அழித்தால், இதற்கு நாம் அறிந்தோ, அறியாமலோ துணைப் போனால் படித்தவர்கள், சிந்திக்கத் தெரிந்தவர்கள், உலகை அறிந்தவர்கள் என்று நம்மைச் சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படவேண்டிய காலம் அருகில் வந்து விடும்.

 

 

பள்ளி நிர்வாகிகளின் கவனத்தை இந்த அவலம் ஈர்க்கவே இல்லையா….?

நீர் நிலைகளைப் பாதுகாக்கும் கடமை பேரூராட்சிக்கும், இஸ்லாமிய இயக்கங்கள் ,  சமூக நல ஆர்வளர்களுக்கும் உண்டு.  நமதுரின் தன்னார்வ  இளைஞர்கள் நினைத்தால்,  அவர்களை இந்த குளத்தின் சுத்தபடுத்தி தண்ணீர் தேக்கி வைத்து நமக்கு பின் இருக்கும் சந்ததியினர் ஆரோக்யமாக வாழ நாம் வழி ஏற்படுத்தி தரவேண்டும்.

ஊதும் சங்கை ஊதி வைப்போம். எத்துனை காதுகளில் ஒலிக்கின்றது என்று பார்ப்போம்.

சற்று திரும்பி பார்போம் :

ஒரு காலத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை களத்தில் நமதூரில் இருக்கும் வாலிபர்கள் குளத்தில் குளித்து மகிழ்வார்கள். அதில் இந்த முனையில் இருந்து அடுத்த முனை வரை போய் வரும் போட்டிகள் நடக்கும். மேலும் குளத்தில் இருக்கும் தண்ணிரை வற்ற விட்டு மீன் பிடிப்பார்கள். அந்த நாளில் ஊரில் இருக்கும் அத்தனை ஆண்களும் குள கரையில் குடி இருப்பார்கள். காலையில் இருந்து மாலை வரும் மீன் பிடிப்பார்கள் . வள மீன்களை பிடிக்க நடக்கும் போட்டி உலக கோப்பை கிரிகெட் இறுதி போட்டியில் இருக்கும் விறுவிறுப்புக்கு இணையாகும்  , பின்னர் அந்த மீன்களை ஏலம் விடுவார்கள். அதற்கும்  பல போட்டி இருக்கும். இது போல் மகிழ்ச்சி கொடுத்த இந்த குளத்தில் சில உயிர் துறந்த சோகமும் உண்டு.

கோட்டகுப்பம் வரும் தப்லிக் ஜமாத்தினர் இந்த குளத்தில் தான் குளிப்பார்கள். இஸ்திமா நடக்கும் நாட்களில் குளத்தில் குளிக்க இடம் இருக்காது.
Advertisements