புது நம்பர் பிளேட்?


உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களைப் பொருத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட காலக்கெடு கடந்துவிட்டது. ஆனால், தமிழக அரசு உட்பட பல மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை இன்னும் செயல்படுத்தவில்லை. இந்த நிலையில்தான், இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச், ”புதிய வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள்ளும், பழைய வாகனங்களுக்கு ஜூன் 15-ம் தேதிக்குள்ளும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்டுவிட வேண்டும். இதை அனைத்து மாநில அரசுகளும் உறுதிப்படுத்தி அறிக்கை அளிக்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தத் தவறினால், மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்…” என்று எச்சரித்துள்ளது. 

 

 

தமிழகத்தில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் திட்டம் எந்த அளவில் இருக்கிறது?

 

 

அதிகாரிகளிடம் பேசினோம்.

 

 

”வெளிநாடுகளில் நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டத்தை நமது மாநிலத்தின் மோட்டார் வாகனவிதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைத்து, புதிய நம்பர் பிளேட்டுகளை கோடிக்கணக்கான வாகனங்களுக்குப் பொருத்துவது என்பது சவாலான விஷயம். இதனால், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திட்டம் கிடப்பிலேயே இருந்தது.

 

 

அதன் பின்பு, ஒரு ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் இந்தத் திட்டத்தைத் தூசு தட்டி எடுத்தபோது, டெண்டர் விடும் விவகாரத்தில் இழுபறி ஏற்பட்டது. கடைசியாக உச்ச நீதிமன்றம், ‘நான்கு வாரங்களுக்குள் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டபோது, தமிழக அரசு சார்பில், ‘தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இருப்பதால், உடனடியாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. ஆனால், இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளைத் துவக்கி இருக்கிறோம்…’ என்று உச்ச நீதிமன்றத்துக்கு பதில் அளித்த தமிழக அரசு, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளது.

 

 

தமிழக அரசு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களைத் தயாரித்து, அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலேயே வாகனங்களுக்கு இந்த நம்பர் பிளேட்களை பொருத்துவதற்காக அகில இந்திய அளவில் டெண்டர் விடுத்துள்ளது. குறைந்த விலைப் புள்ளி அளிக்கும் ஒப்பந்ததாரர் விரைவில் தேர்வு செய்யப்பட்டு, புதிய வாகனங்களுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தப்படும்.

 

 

பழைய வாகன உரிமையாளர்களுக்கு விரைவில் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி, பழைய வாகன உரிமையாளர்கள், அவரவர் வாகனத்தைப் பதிவு செய்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனது வாகனத்தின் பதிவு எண்ணைப் பதிந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு, ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் இறுதி வரை பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பொருத்தப்படும். தங்கள் வாகனத்துக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பொருத்தப்படும் தேதியை, வட்டாரப் போக்குவரத்துக் கழகம் ஆன் லைன் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக தெரியப்படுத்தும். மேற்கண்டவை எல்லாம் அதிகாரிகள் அளவில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் இறுதி வடிவம் கொடுக்கவில்லை. விரைவில் அரசு அனுமதி பெற்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்…” என்கிறார்கள்!

 

 

அதுவரை காத்திருப்போம்!

Advertisements