திண்டிவனத்தில் வக்பு வாரிய இடத்தில் பஸ் நிலையம் கட்டுவதா?


திண்டிவனத்தில் உள்ள வக்ப் வாரிய சொத்தில் பஸ் நிலையம் கட்டப்படும் என அறிவித்ததற்கு ஐக்கிய ஜமா அத் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 

விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் பேரவை தலைவர் அமீர்அப்பாஸ் நேற்று கூறியதாவது:

 

திண்டிவனத்தில் வக்பு வாரிய சொத்தில் பஸ் நிலையம் அமைக்கப் போவதாக நகரமன்ற தலைவர் அறிவித்துள் ளார். இதனை நாங்கள் கண்டிக்கிறோம். தமிழகத்தில் வக்பு வாரியத்துக்கு ரூ.5 கோடியை முதல்வர் கொடுத்துள்ளார். அதே போல் ஓய்வூதியத்தையும் உயர்த்தியுள்ளார். இப்படி நல்ல திட்டங்களை அவர் செயல்படுத்தி வரும் போது திண்டிவனம் நகரமன்ற தலைவர் தமிழக அரசை எதிர்ப்பு கொள்ளும்படி நடந்துள்ளார்.

 

வக்பு வாரிய சொத்து களை இந்திய அளவில் பாதுகாக்க போர்டு உள்ளது. அனாதைகளுக்கு உதவியாகவும், பள்ளி, மசூதிகள் போன்ற நோக்கத்துக்காக இந்த சொத்துகளை முன்னோர்கள் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.

 

ஆனால் இதில் பஸ் நிலையம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

 

அந்த இடத்தில் மகளிர் கல்லூரி கட்ட வேண்டும். நகரமன்ற தலைவர் அறிவித்ததற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும். அல்லது மறு பரிசீலனை செய்யப்போவதாக அறிவிக்க வேண் டும். இல்லையென்றால் தமிழக அளவில் இந்த பிரச்சனையை கொண்டு சென்று போராட்டம் நடத்துவோம்.

 

தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது மின்வெட்டு. முஸ்லிம்கள் அதிகளவில் ரைஸ் மில் வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு 8, 10 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேறு மாநிலத்துக்கு செல்கின்றனர். தமிழ்நாடு இருண்டு கிடக்கிறது. கூடங்குளம் அனல் மின்நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும். ஆபத்து என்பது அனைத்திலும் உள்ளது. ஒரு சிலருக்காக நாட்டை இருளில் போடுவது தவறானது. இவ்வாறு கூறினார்.

 

செயலாளர் அப்துல்கரீம், இயக்குநர் முகமது ஜக்கிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisements