ஆதாருக்கு ஆபத்து


நாடு முழுவதும் எல்லா குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது நீண்டகால விவாதப் பொருளாக இருந்தது. இந்நிலையில் 2008ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கடல்வழியாக வந்த தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலை அடுத்து நாடுமுழுவதும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து பேச்சு தீவிரமடைந்தது. அதனையடுத்து 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை மேற்கொள்ள ஒரேமாதிரியான அடையாளத்திற்கான இந்திய தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) தொடங்கப்பட்டது. இதன் தலைவராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்த நந்தன் நீல்கனி 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றுக் கொண்டார். இந்த ஆணையம் தேசிய திட்டக்குழுவின் கீழ் செயல்படுகிறது.

 

இதனையடுத்து தேசிய அடையாள அட்டை வழங்குதற்கான பணிகள் தீவிரமடைந்தன. முதன்முதலாக 2010ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தெம்பலி கிராமத்தில் ஒரு சிலருக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வழங்கினர். அதன்பிறகு நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு தொடங்கியது. ஆதாரா? உடாயா? தேசிய அடையாள அட்டை குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை வழங்கும் ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக Ôஉடாய் என்றும் சொல்லுகின்றனர். பொதுவாக தேசிய அடையாள அட் டை. இந்த அட்டையில் 12 இலக்க அடையாள எண், புகைப்படும், பெயர், முகவரி, கருவிழிப்பதிவு, கைரேகைகள், ரத்தப்பிரிவு, வங்கி கணக்கு விவரங்கள், பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இந்த அட்டை பெற விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.

 

தமிழ்நாட்டில் வரவேற்பு தமிழகத்தில் முதலில் பரிசோதனை முயற்சியாக சில வங்கிகளில் தொடங்கியது. போதிய விளம்பரம் இல்லாததால் மக்களிடம் வரவேற்பு இல்லை. இதனையடுத்து தமிழக அஞ்சல் வட்டத்தின் மூலமாக இப்பணி தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்.25ம் தேதி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் நவ.1ம் தேதி சென்னையில் உள்ள பொது அஞ்சலகம், தி.நகர், மயிலாப்பூர், பூங்காநகர் அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.

 

கருவிழிப்பதிவு, கைவிரல் ரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், ஆவணங்களை சரிபார்த்தல் என அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு வருக்கும் அதிகபட்சமாக 15 முதல் 20நிமிடங்கள் வரை ஆனதால் ஒரு அஞ்சலகத்தில் ஒரு நாளைக்கு 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்தது. அதனால் மயிலாப்பூர் உள்ளிட்ட சில அஞ்சலகங்களில் ஒரு மாததத்திற்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டது. இப்படி ஆர்வம் காட்டியவர்கள் 75 சதவீதத்தினர் முதியவர்கள். இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி பிப்.7ம் தேதி காலை தமிழகத்தில் விண்ணப்பங்கள் பெற்ற 23 அஞ்சலகங்களிலும் திடீரென அடையாள அட்டைக்காக பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. பதிவு செய்ய வந்த ஏராளமான பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். மீண்டும் பதிவு தொடருமா? அரசு தான் சொல்ல வேண்டும்.

 

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் நிலை!

 

தமிழ்நாட்டில் 25-10-2011முதல் தேசிய அடையாள அட்டைக்கான விவர பதிவும், விண்ணப்பம் பெறுவதும் மட்டுமே நடந்துள்ளது. இன்னும் யாருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பிப்.7ம் தேதி வரை 21 லட்சத்து 32 ஆயிரத்து 804 பேர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஆணையம் சொல்கிறது. இப்படி பதிவு செய்வதும் விண்ணப்பத்தை பெறு வதும் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பம் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திற்கு அனுப்பிவிடுவோம் என்கின்றனர் அஞ்சல்துறை அதிகாரிகள்.

 

செலவுதான் காரணமா?

 

நாடு முழுவதும் அடையாள அட்டை வழங்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2009-10 பட்ஜெட்டில் 100 கோடியும், 2010-11 பட்ஜெட்டில் 1900 கோடி என இதுவரை 3172 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர அடுத்தக்கட்டப் பணிகளுக்காக 8861 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்படி எந்தவித வருவாயும் இல்லாத விஷயத்திற்கு கோடிக் கணக்கில் செலவிடுவது நாட்டின் செலவினத்தை அதிகரிக்கும் என்று நிதி ஆலோசகர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சகம் சார்பில் கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேசிய மக்கள் தொகை பதிவு அட்டை(என்பிஆர்) வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய அடையாள அட்டை வழங்கும் அதே முறையில் வழங்கப்படுகிறது.

 

நிறுத்தம் ஏன்?

 

தபால் துறை அதிகாரிகள் தரப்பில் கிடைத்த தகவல்கள்: அஞ்சலகங்கள் மூலமாக பதிவுகள் நடைபெற்றாலும் அதனை தனியார் நிறுவனங்கள்தான் செய்து வந்தன. நிதி ஒதுக்குவதில் அமைச்சகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் இந்த திடீர் நிறுத்தத்திற்கு காரணம் என்கிறார்கள். அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பதிவு முறையில், பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகமாகும் தேசியஅடையாள அட்டை வழங்கும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது எவ்வளவு சாத்தியம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இப்பிரச்னை குறித்து பேட்டி ஏதும் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisements