உதவி செய்ய போய் விபரிதம் ?


உதவி செய்ய போய் விபரிதம் ?

 

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்குள்ள மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் கடந்த 10 நாட்களாக அப்பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் அங் குள்ள மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு சில பகுதிகளுக்கு மட்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. எனினும் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டு பழைய பட்டின தெரு, ஹாஜி ஹுசைன் தெருக்களுக்கு இதுவரை மின் விநியோகம் வழங்கப்படவில்லை. அங்குள்ள மின்கம்பங்கள் சாய்ந்துள்ளால் இந்த அவலநிலை நீடிக்கிறது.

 

இதையடுத்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலம் மற்றும் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து மின்வாரிய தற்காலிக ஊழியர் வடிவேல் (30) அப்பகுதிக்கு சென்று சரிந்து விழுந்த மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் நேற்று மதியம் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அப்பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் உதவினர்.

 

அங்கு புதிய மின்கம்பம் நடும்போது, எதிர்பாராதவிதமாக உயர் மின்னழுத்த கம்பி மீது உராசியது. இதில் கம்பத்தை தூக்கி வைத்திருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்ஊழியர் வடிவேலு உள்பட 10 பேர் மின்சாரம் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டனர்.

 

இதில் வடிவேலு மற்றும் பொதுமக்கள் சேட்டு (42), ஜாகீர் அகமது (18), சமீர் (20), முகமது மருதுக் (19), ஜமால் (18), அப்துல்ரஹீம் (18), அப்துல்நாசர் (19), சாதிக் பாஷா (38), மிதுன் (18) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சம்பவம் குறித்து மின்துறை அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் பொதுமக்களை அழைக்கவில்லை. மின் இணைப்பு வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் தாங்களாகவே முன் வந்து கம்பத்தை நட்டுள்ளனர். இதனால்தான் இந்த விபரீதம் நடந்துள்ளது என்றார்.

 

நல்லது நடக்க வேண்டும் என்று உதவிய பொதுமக்களுக்கு

கிடைத்த இந்த  அவப்பெயர்  நியாயமா ? 

Advertisements