இன்று மாலைக்குள் மின்சாரம்: ஆட்சியர்


விழுப்புரம் ஆட்சியர் மணிமேகலை கூறியதாவது;

 

தானே புயலால் விழுப்புரம் மாவட்டம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

 

கோட்டக்குப்பம், மரக்காணம், உளுந்தூர்பேட்டை, கண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் மட்டும் மின் விநியோக பணிகள் நடந்து வருகிறது. நாளை (இன்று)மாலைக்குள் மின்சாரம் வழங்கப்படும். மின்துறைக்கு தேவையான உபகரணங்கள் வெளி மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நமது மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதியில் 80சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீன்துறை மூலம் பாதிக்கப்பட்ட கட்டுமரங்கள் குறித்து புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையினர் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளனர். போதுமான மருந்துகள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் புயலுக்குப் பின்னர் முழுவீச்சில் அனைத்துப் பணிகளும் செய்யப்பட்டுள்ளன.

 

தானே புயலுக்கு இதுவரை 10 பேரும், 280 கால்நடைகளும், 5,500 கோழிகள் உயிரிழந்துள்ளன. வேளாண்மை துறையில் 22609 ஹெக்டேர் பயிரும், தோட்டக்கலைத்துறையில் 1175 ஹெக்டேரும், 290 படகுகளும், 8200 கிலோ மீன் வலையும் 648.71கி.மீ நெடுஞ்சாலைகளும், நகராட்சியில் 40.74கி.மீ சாலைகளும் சேதமடைந்துள்ளது. தோராயமாக ரூ.185 கோடி மதிப்பில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள் கணக் கெடுக்கப்பட்டு வருகின்றன.

 

வதந்தி பரப்பினால் நடவடிக்கை:

 

நேற்று காலை நமது மாவட்டத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. வதந்திகளை நம்பாமல் பொதுமக்கள் பீதியடையாமல் இருக்க வேண்டும். இது போன்று வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisements