பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்


பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் 

கோட்டகுப்பத்தை தானே புயல் கடுமையாக தாக்கியுள்ளது. கோட்டகுப்பம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மின்சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகமும் தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

 

மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, 5, 7 மற்றும் 16வது வார்டு கவுன்சிலர்கள் இளங்கோ, சரவணன், பார்த்திபன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம், இரவு 7.30 மணி வரை நீடித்தது. அலுவலகத்துக்குள் அதிகாரிகளும், ஊழியர்களும் வெளியே வர முடியாமல் சிறை வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கோட்டகுப்பம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சமரச பேச்சு நடத்தினர். பின்னர், கவுன்சிலர்களே தங்களது சொந்த செலவில் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து இரவு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்பிறகே, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

இதுபற்றி திமுக கவுன்சிலர் இளங்கோ கூறுகையில், `கடந்த 2 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், அதிமுக வார்டுகளில் மட்டும் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எதிர்க்கட்சி கவுன்சிலர் வார்டு பகுதிகளில் குடிநீர் வழங்கப்படவில்லை. நாளை(01/01/2012) குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Advertisements