பிரச்னைகள் இரண்டு; காரணம் ஒன்று!


முல்லை பெரியாறும் கூடங்குளம் அணுமின் நிலையமும் : 

பிரச்னைகள் இரண்டு; காரணம் ஒன்று

இரு வேறு பிரச்னைகளுக்காக நடந்து வந்தாலும், முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கும், கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்துக்கும் ஓர் அடிப்படை ஒற்றுமை இருக்கிறது. இரண்டுக்கும் பின்னணியில் இருப்பது, “பயம்‘” முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும்’ என, கேரள மக்கள் பயப்படுகின்றனர்.

 

“அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டுவிடும்’ என, கூடங்குளம் மக்கள் பயப்படுகின்றனர். “பூகம்பம் வந்தால் எல்லாமே போச்சு’ என்கின்றனர் அவர்கள். “சுனாமி வந்தால் சின்னாபின்னமாகி விடுவோம்’ என்கின்றனர் இவர்கள். இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர்.முல்லைப் பெரியாறு அணையின் வரலாறுகளைச் சொல்லி, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சுட்டிக்காட்டி, அணை உடையவே உடையாது என, சத்தியம் செய்கிறது தமிழக அரசு.

 

கூடங்குளம் அணுமின் நிலையம், சர்வதேசத் தரம் வாய்ந்தது எனக் கூறி, உலகத்தில் வேறெங்கும் மேற்கொள்ளப்படாத பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் இங்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது இந்திய அணுமின்சக்தி கழகம்.

முல்லைப் பெரியாறு பிரச்னையை, பொதுமக்களை விட அரசியல்வாதிகள் தான் அதிகம் தூண்டிவிடுகின்றனர். கூடங்குளத்தில், அரசியல்வாதிகள் மவுனம் காக்கின்றனர். அப்பகுதி மக்கள் தான் போராடி வருகின்றனர். தற்போது, முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் மக்கள் கொந்தளிக்கத் துவங்கி விட்டனர். தொடர் போராட்டங்களால், கேரளா எல்லையில் இன்னமும் கொதிப்பு அடங்கவில்லை.

 

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, அப்துல் கலாமோ, மத்திய அரசோ, மந்திரி பிரதானிகளோ, யார் சொன்னாலும், அப்பகுதி மக்கள் கேட்பதாக இல்லை. மற்ற பகுதிகளை விட கூடங்குளம் பகுதி பாதுகாப்பானது என படம் போட்டு காட்டிவிட்டது மத்திய குழு. இருந்தாலும், இடிந்தகரை மக்களை சமாதானப்படுத்தும் வழியைக் காணோம்.

“ரிக்டர் அளவில் 6 வரை தாங்கக் கூடிய சக்தி கொண்டது முல்லைப் பெரியாறு அணை. சந்தேகத்துக்கு இடமில்லாமல், மேலும் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என, தமிழக அரசு சொல்கிறது; சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுள்ளது. ஆனாலும், கேரளா மக்கள் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை.

 

கேரளா முதல்வர் மனது வைத்தால், முல்லைப் பெரியாறு பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். இடைத்தேர்தல் அரசியலை ஓரங்கட்டிவிட்டு, கட்சிக்காரர்களை கொஞ்சம் கட்டுப்படுத்தி வைத்தால், தானாகவே அந்த விவகாரம் அடங்கிவிடும்.

அதேபோல் தான் கூடங்குளம் பிரச்னையும். தமிழக முதல்வர் மனது வைத்தால், ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். முதலில், “அணுமின் நிலையம் வேண்டும்; விஞ்ஞானிகளின் விளக்கம் திருப்தியளிக்கிறது’ என்றவர் தான் ஜெயலலிதா. திடீரென, “இது மத்திய அரசு கவனிக்க வேண்டிய விஷயம்’ என்பதாக ஒதுங்கிக் கொண்டார்.

 

தமிழக அரசு அமைதி காக்கிறது என்ற தைரியத்தில் தான் கூடங்குளம் உண்ணாவிரதம் தொடர்கிறது. அணுமின் நிலையத்துக்குள் யார் இருக்க வேண்டும்; யார் இருக்கக் கூடாது என்பதெல்லாம், போராட்டக்காரர்களால் தீர்மானிக்கப்படுகிறது.இந்த நிலையில், இரு பிரச்னைகளையும் இணைக்கும் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற தமிழகத்தின் வாதத்தை கேரளா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்ற மத்திய அரசின் கருத்தை, தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாதா?

credit :dinamalar

Advertisements