வாழைப்பழம் தொண்டையில் சிக்கி எல்.கே.ஜி. மாணவன் பரிதாப சாவு


 

சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்த மூன்றரை வயது மாணவன் ஹரிஸ் சாய்நாதன் என்ற மாணவனின் தொண்டையில் வாழைப்பழம் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தான்.

சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை அம்பாள் நகர் ஸ்ரீராமானுஜம் அப்பார்ட்மெண்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். அவருடைய மனைவி பாக்யலட்சுமி. அவர்களது ஒரே மகன் ஹரிஸ் சாய்நாதன்(மூன்றரை வயது). பல்லாவரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

நேற்று காலை 8.45 மணிக்கு கிருஷ்ணகுமார் தனது மகனை பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார். 10.15 மணி அளவில் தேநீரி இடைவெளியில் அன்று பிறந்தநாள் கொண்டாடிய மாணவன் ஒருவன் அனைவருக்கும் சாக்லெட் கொடுத்துள்ளான். அந்த சாக்லெட்டை சாப்பிட்ட சாய்நாதன் அதன் பிறகு தான் வைத்திருந்த பிஸ்கெட், வாழைப்பழத்தை சாப்பிட்டான்.

வாழைப்பழத்தை சாப்பிட்டபோது அது அவனது தொண்டையில் சிக்கி மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதையடு்தது சிறுவன் மயங்கி விழுந்தான். உடனே வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர் சந்துரு ஆகியோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

உடனே இது குறித்து சாய்நாதனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓடி வந்து மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகுமார் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பள்ளியில் முதலுதவி சிகிச்சை அளிக்ககூட டாக்டர் இல்லாத நிலையில் ஹரிஸ் சாய்நாதன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சாய்நாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுவனின் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவி்ததனர்.

Advertisements