ஹஜ் பயணம் ஒரு சுற்றுலா அல்ல…


ஹஜ் பயணம் ஒரு சுற்றுலா அல்ல…

ஹஜ்ஜூக்குச் செல்லும் ஹாஜிகளே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

ஹஜ்ஜைப்பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்). (22:27) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான். மேலும் கூறுகின்றான்… …இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (3:97)

இவ்வாறு முஸ்லிம்கள் மீது ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ள நற்செய்தியை அல்லாஹ் தன் திருமறையில் எடுத்துக் கூறியுள்ளான்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஹஜ்ஜூக்குச் செல்பவர்களின் மனநிலையும் செயல்பாடுகளும் நம்மை வருத்தமடையச் செய்கின்றன. ஏதோ ஒரு சுற்றுலாவுக்குச் செல்வது போன்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.  காரணம் ஹஜ் ஏற்பாட்டாளர்களின் கவர்ச்சிகரமான விளம்பரம், சொகுசான பயண ஏற்பாடு என்றெல்லாம் விளம்பரம் செய்து தனது கல்லாப்பெட்டிக்களை நிரப்பும் வேலையை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். அதனாலேயே ஹஜ்ஜூக்குச் செல்லும் ஹாஜிகள் தமது மார்க்கக் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்கிறோம் என்ற மனநிலைமாறி ஏதோ ஒரு சுற்றுலாவிற்கு வந்தது போல் நடந்து கொள்கிறார்கள்.

முஸ்லிம்கள் நோன்பு என்ற கட்டாயக் கடமையை நிறைவேற்றும் போது எப்படி பகல் முழுதும் பசித்தும், தாகித்தும், இச்சைகளை அடக்கிக் கொண்டும் கடமையை முழுமையாக நிறைவேற்றுகிறோமோ அதைப்போல் உம்ரா மற்றும் ஹஜ் கடமையும் ஒரு கஷ்டமான கடமை என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஹஜ் கடமையின் நிகழ்வுகளை ஒரு முறை நீங்கள் யோசித்துப் பார்த்தால் அதன் அர்த்தம் புரியும். தியாகச் செம்மல் இபுறாகீம் நபி (அலை) அவர்களின் வரலாற்றுச் சம்பவங்களே நமக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. அந்த தியாகச் செம்மலின் வரலாற்றை, நிகழ்வுகளின் தியாகத்தை நினைவு படுத்தும் விதமாகவும் படிப்பினை தரும் நிகழ்வாகவும் அமைந்தவையே இந்த ஹஜ் புனிதக்கடமையாகும்.

ஹஜ்ஜூக்குச் செல்லும் ஹாஜிகளே! நீங்கள் ஹஜ்ஜூக்குச் செல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் ஹஜ் ஏற்பாட்டில் முதலாவதாக தக்வா என்னும் இறையச்சத்தை தயார் படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

…..ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறி வுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.(2:197) என்று தன் திருமறையில் கூறுகின்றான். ஆனால் இன்றைய நிலை வருத்தத்திற்குரியதாக உள்ளது.

ஹஜ் ஏற்பாட்டாளர்களின் அதாவது ஏஜென்டுகளின் கவர்ச்சிகரமான விளம் பரங்கள் இந்த பயணம் ஹஜ் என்னும் மார்க்கக் கடமையை நிறைவேற்றச் செல்கிறோம் என்ற உணர்வை அகற்றிவிடுகிறது. குளுகுளு வசதி செய்யப்பட்ட அறையென்றும், குளுகுளு வசதியான பஸ், குளுகுளு மினரல் வாட்டர், செல்லுமிடத்திற்கெல்லாம் குளுகுளு பஸ் வசதிகள், தேன் தமிழில் சொற்பொழிவு, நீண்ட அனுபவம், தென்இந்திய அறுசுவை உணவு இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறான விளம்பரங்களை பார்ப்பவர்களின் மனநிலை எப்படி ஆகிவி டுகிறது? ஓ.. எல்லாமே குளுகுளு… சூப்பர் சாப்பாடு.. ஓகே.. ஓகே.. என்று தன்னை தயார்படுத்திக் கொண்டு பல லட்சங்களை கட்டணமாகக்கட்டி புறப்பட்டுவிடுகிறார்கள்.

எந்த ஹஜ் ஏற்பாட்டாளர்களும் எந்த ஒரு ஹாஜிக்கும் மனநிறைவு தரும் வகையில் அவர்களுக்கு சேவை செய்து அவர்களின் கடமையை முழுமையாக முடித்து அழைத்து வரமுடியாது. இது எதார்த்தமான உண்மை. எவ்வளவுதான் முயற்சித்தாலும் உம்ரா ஹஜ் பயணத்தில் கஷ்டத்தைத்தவிர வேறு எதையும் நீங்கள் பெற முடியாது என்பதை அழுத்தமாக நினைவில் கொள்ளுங்கள்.

கஃபாவை வலம் வருவதும், ஸபா, மர்வா மலைக்குன்றுகளுக்கிடையே ஓடுவதும், மினா எனும் (இப்போது ஹாஜிகளின் வசதிக்காக எளிதில் தீப்பற்றமுடியாத கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன) பாலைவனப் பகுதியில் தங்குவதும், அரபா பெரு வெளியில் இறைவனை நினைவு கூர்ந்து பிரார்த்திப்பதும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முஸ்தலிபா சென்று அங்கிருந்து மீண்டும் மினா வந்து ஜம்ரதுல் அகபாவில் கற்களை எறிவதும் என்று குறிப்பிட்ட கடமைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முறையாக முழுமையாக நிறைவேற்றுவது தான் ஹஜ் கடமை. இதில் எங்குமே உங்களுக்கு சவுகரியம் கிடைக்கப்போவதில்லை…  ஆனால் ஹஜ்ஜூக்குச் சென்று வந்தவுடன் இல்லை இல்லை அங்கேயே மினாவிலிருக்கும் கூடாரத்திலேயே சாப்பாட்டுக் குறை என்று திட்டுவதும், சாப்பாடு நேரத்திற்கு கிடைக்கவில்லை என்று ஏசுவதும், “இதுக்குத்தான் சொன்னேன் இந்த பயலுக சர்வீஸ்ல வந்துருக்கக்கூடாது அங்க பாரு இன்னாருடைய சர்வீஸ் சூப்பரா இருக்கு’ன்னு….” பெரும்பாலான ஹாஜிகள் ஹஜ் ஏற்பாட்டாளர்களை திட்டித்தீர்ப்பதை நாம் பல முறை பார்த்துள்ளோம்.

ஹாஜிகளே உங்களுக்குத் தெரியுமா?

இலட்சக்கணக்கான மக்களின் கூட்ட நெரிசலிலும் அரசின் கடுமையான கட்டுப்பாடு களுக்குமிடையில் உங்களுக்கு அந்த சுவை(!?)யான உணவை வழங்க எவ்வளவு கஷ்டப்படுவார்களென்று. நீங்கள் எத்தனை இலட்சங்களைக் கொட்டிக்கொடுத்தாலும் ஏற்பாட்டாளர்கள் சொல்வதைப் போன்றோ அல்லது நீங்கள் கற்பனை செய்துள்ளவை போன்ற வசதிகளோ ஹஜ் பயணத்தின் போது உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஹஜ் ஏற்பாட்டாளர்கள் என்பவர்கள் உங்கள் பயணத்திற்கான ஆவணங்களை முறைப்படுத்தி, பயண ஏற்பாடுகளை கவனித்து அழைத்துச்  செல்லும் வழிகாட்டிகள் மட்டுமே. ஹஜ்ஜில் உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை ஒரு போதும் அவர்களால் குறைத்துவிட முடியாது உதாரணம் நோன்பின் போதுள்ள பசியையும் தாகத்தையும் அந்தக் காலவரையறை வரை எப்படி பொறுத்துக் கொள்கிறீர்களோ அதுபோல் இந்தக் கடமையில் உள்ள கஷ்டங்களையும் நீங்கள் பொருத்தே ஆக வேண்டும். பொறுமையளார்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.

இந்த நிலைக்கு யார் காரணம்?

ஹஜ் ஏற்பாட்டாளர்களே! ஹாஜிகளை அழைத்துச் செல்லும் உலமாக்களே!! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களின் கல்லாப்பெட்டிகளை நிரப்புவதற்காக கவர்ச்சிகரமான விளம்பரங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஆண்டு முழுதும் இந்த ஹஜ் காலத்திற்காக காத்திருந்து, வியாபார நோக்கத்தோடு செயல்படும் உங்களைப் போன் றோரின் தவறான வழிகாட்டலினால் ஹஜ் என்னும் புனிதப் பயணம் ஒரு சுற்றுலாவில் கிடைக்க வேண்டிய வசதிகள் போன்று கிடைக்க வேண்டும் என்று ஹாஜிகள் விரும்பும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பென்று கட்டணங்களை வசூலித்து கல்லாக் கட்டும் வியாபாரிகளே! ஹஜ் மற்றும் உம்ரா கடமையின் போதுதான் ஏழை, பணக்காரன், நிறம், மொழி என்ற ஏற்றத் தாழ்வுகளை கலைந்து மனிதன் இறைவனுக்கு அடிமை என்ற ஒப்பற்ற நிலையைக் காணமுடிகிறது. அதை உலகுக்கு உணர்த்தும் உன்னதக்கடமையாற்றச்  செல்லுமிடத்திலும் உங்களின் வியாபாரப் புத்தியைப் புகுத்தி கட்டணத்தில்  தரம்பிரித்து அங்கும் கல்லாக்கட்டி விடுகிறீர்கள்.

ஏற்பாட்டாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். கவர்ச்சிகரமான ஹஜ் விளம்பரத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஹஜ் எனும் புனிதக்கடமையை வியாபாரமாக் காதீர்கள். ஹஜ்ஜின் உண்மை நிலையையும் அதன் தன்மையையும் ஹாஜிகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.  அல்ஹம்துலில்லாஹ் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் ஹாஜிகளுக்கு வேண்டிய அளவிற்கு சவூதி அரேபியா அரசு வசதிகள் செய்து கொடுத்துள்ளது. உலகின் பல பாகங்களிலிருந்து வரும் பல லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இனம், நிறம், மொழி கடந்து குழுமும் ஒரு மாபெரும் மாநாடு. சுப்ஹானல்லாஹ்! உலகில் உள்ள எந்த சமுதாயத்திற்கும் கிடைக்காத இந்த அருட்பாக்கியம் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைத்துள்ளது  என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

வல்ல ரஹ்மானின் அழைப்பை ஏற்று மார்க்கக் கடமையை செய்ய வரும் ஹாஜிகளுக்கு இபுறாகிம் நபி (அலை) அவர் களின் தியாகங்களை எடுத்துச் சொல்லி அதன் வரலாற்றுப் பின்னணிகளையும் ஹஜ்ஜின் எதார்த்த நிகழ்வுகளையும் முழுமை யாக விளக்குவதன் மூலம் ஹாஜிகள் ஹஜ்ஜைப்பற்றிய விளக்கம் அறியும் வாய்ப்பை பெறுகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு கவர்ச்சிகரமான விளம்பரங்களைத் தவிர்த்து குறைவாகக் கல்லாக் கட்டினாலும் உண்மையைச் சொல்லி நிறைவான சேவையைச் செய்யுங்கள். அதுவே நீங்கள் செய்யும் நன்மையான காரியமாகும்.

நன்றி : த மு மு க இணையத்தளம். 

 

Advertisements