கிழக்கு கடற்கரை சாலை – அதிகாரிகள் கவனிப்பார்களா


கிழக்கு கடற்கரை சாலை – அதிகாரிகள் கவனிப்பார்களா

கிழக்கு கடற்கரை சாலை இணைப்புப் பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது. தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள முத்தியால்பேட்டையில், சாலை ஆக்கிரமிப்புகளால் நீண்ட காலமாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. கோட்டக்குப்பம் கறிக் கடை சந்தில் துவங்கும் போக்குவரத்து நெரிசல், முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு, கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் வரை நீடிக்கிறது. இதன் காரணமாக இ.சி.ஆர்., வழியாக சென்னைக்குச் செல்லும் வாகனங்களும், அங்கிருந்து வரும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகின்றன. இ.சி.ஆரில் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, தமிழக-புதுச்சேரி அரசுகள் கைக்கோர்த்து இ.சி.ஆர்., பைபாஸ் சாலை திட்டத்தை வகுத்தன.கோட்டக்குப்பம் தேவி தியேட்டர் அருகே துவங்கி, லெனின் நகர் வழியாக கருவடிக்குப்பத்தைக் கடந்து சிவாஜி சிலை வரை, 2.5 கி.மீ., பைபாஸ் சாலை இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

புதுச்சேரி அரசு துரிதமாக வேலையில் இறங்கி கருவடிக்குப்பம் லெனின் நகர் வரை பணிகளை முடித்து விட்டது. ஆனால், நிலத்தை தமிழக அரசு கையப்படுத்தாததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஒரு வழியாக தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலை துறையின் அனுமதியோடு 1176. 22 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் வகுக்கப்பட்டு கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் சாலை விரிவாக்க பணிகள் துவங்கப்பட்டன. முதற்கட்ட சர்வே எடுக்கப்பட்ட இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு 30 மீட்டர் பரப்பளவிற்கு செம்மண் பரப்பப்பட்டது. கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டு பல மாதங்களாகியும் சாலை முழுமையாக அமைக்கப்படவில்லை. நான்கு இடங்களில் பாலங்கள் கட்டும் பணி முடுக்கி விடப்பட்டும் பணிகள் அரைகுறையாகவே நிற்கின்றன. இதுவரை 40 சதவீத சாலை விரிவாக்க பணிகளே முடிந்துள்ளன.சென்டர் மீடியன், கால்வாய் அமைக்கும் பணி இன்னும் துவக்கப்படவே இல்லை. இதனால், திட்டமிட்டபடி சாலை பணிகள் முடியாது என்பது நிச்சயம்.மழைக்காலம் விரைவில் துவங்க உள்ளது. மழை துவங்கி விட்டால், பணிகளை மேற்கொள்ள முடியாது. அடுத்த 6 மாதங்களுக்கு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இ.சி.ஆர் பைபாஸ் சாலை விரிவாக்க பணிக்காக கோட்டக்குப்பம் பகுதியில் மொத்தம் 28 பேருடைய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதில் 10 பேருடைய வீடுகளும் அடங்கும். இவர்களுக்கான இழப்பீட்டு தொகை கோப்புகளை தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலை துறை, வானூர் வருவாய் துறைக்கு அனுப்பி வைத்துவிட்டது. இவர்களுக்கு இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படாதாலும் சாலை விரிவாக்க பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி-தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு, மழைக் காலத்திற்குள் சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisements