புதிய திட்டம் : பட்டா மாற்ற வி.ஏ.ஓ., விடம் மனு: கலெக்டர் அறிவிப்பு


புதிய திட்டம் : பட்டா மாற்ற வி.ஏ.ஓ., விடம் மனு: கலெக்டர் அறிவிப்பு


பட்டா மாற்றுதல், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல், முதியோர் ஓய்வூதியம் வழங்குதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கி பேசியதாவது: பட்டா மாற்றும் முறையை எளிமையாக்க அந்தந்த பகுதி வி.ஏ. ஓ.,க்களிடமே பொது மக்கள் உரிய சான்றுகளுடன் திங்கட்கிழமை தோறும் மனு கொடுக்கலாம். கூடுதல் கிராமங்களில் பொறுப்பு வகிக்கும் வி.ஏ.ஓ.,க்கள் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளிலும் பொது மக்களிடம் பட்டா மாற்றுவதற்கான மனுக்களை பெறலாம். மனுக்கள் பெற்றவுடன் அதற்கான ஒப்புதல் சீட்டை வி.ஏ.ஓ.,க்கள் உடனடியாக மனு தாரர்களிடம் வழங்குவார்கள். மனு கொடுத்த 2வது வெள்ளிக் கிழமை மூலப் பத்திரங்களுடன் தேவையான சான்றிதழ்களை கொடுத்து தாசில்தார் அலுவலகத்தில் பட்டா மாறுதல் உத்தரவை பெறலாம்.

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், மாணவர்களிடம் பெறும் விண்ணப்பங்களை தாசில்தார் அலுவலகம் மூலம் ஆய்வு செய்து ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

அதே போல் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை உடன் ஆய்வு செய்து தகுதியுள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியில்லாத விண்ணப்பங்கள் எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறது என்பதை விண்ணப்பத்தாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பொது மக்களிட மிருந்து பெறப்படும் அனைத்து விண்ணப்பங்கள் குறித்து தனித்தனி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் மணிமேகலை பேசினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., வெங்கடாஜலம், ஆர்.டி. ஓ.,க்கள் வரலட்சுமி, நாகபூஷணராஜூ, பிரியா, நில அளவை உதவி இயக்குனர் ராகவன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ராஜாத்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisements