கோட்டக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு


கோட்டக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம்

: ஜெயலலிதா அறிவிப்பு

பல்வேறு பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கோட்டக்குப்பத்தில் நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க. அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியை “அலங்கோல ஆட்சி” என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு தமிழகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. விழுப்புரம் வடக்கு மாவட்டம், வானூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ வசதி, சாலை வசதி, சுகாதார வசதி உள்பட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், ஆறு மருத்துவர்கள் இருக்க வேண்டிய வானூர் தாலுகா மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் தான் தற்போது பணியில் இருப்பதாகவும், இரவு நேரத்தில் மருத்துவரே இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மருத்துவமனை சுகாதாரமற்று இருப்பதாகவும், வானூர், கண்டமங்கலம் ஒன்றியங்களில் சாலைகள் முற்றிலும் பழுதடைந்து உள்ளதாகவும், திண்டிவனம் பாண்டிச்சேரி நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக முடியாததன் காரணமாக கிராமத்திற்கான இணைப்புச் சாலை முறையாக போடப்படவில்லை என்றும், இதன் காரணமாக ஏற்படும் சாலை விபத்தின் விளைவாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். இது மட்டுமல்லாமல், கோட்டக்குப்பம் பேரூராட்சியைச் சேர்ந்த சின்னமுதலியார் சாவடி குப்பம் மற்றும் பெரிய முதலியார் சாவடியில் உள்ள பகுதிகள் கடல் அரிப்பால் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாகவும், இந்தக் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து, சாலை மறியல் செய்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தமிழக அரசால் மானிய விலையில் கொடுக்கப்படும் டீசலை மீனவர்கள் பெற வேண்டுமானால் சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், விழுப்புரத்திலேயே ஒரு டீசல் பங்க் அமைத்துத் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டும், தொடர்ந்து அதை மைனாரிட்டி தி.மு.க. அரசு நிராகரித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இலங்கை கடற்படையினரின் தாக்குதல், மத்திய அரசின் கடல்மீன் தொழில் ஒழுங்குமுறை வரைவுச் சட்டம் போன்றவற்றின் காரணமாக மீனவர்களின் வாழ்க்கையே கேள்விகுறியாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகிக் கொண்டிருக்கையில், குடிநீர்ப் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கும் திண்டிவனத்தில், விளை நிலங்களுக்கு மத்தியில் சிப்காட் வளாகம் அமைக்கப் போவதாக தி.மு.க. அரசு அறிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. எனவே, விழுப்புரம் வடக்கு மாவட்டம், வானூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் கடல் அரிப்பைத் தடுக்காத, மருத்துவ வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றித் தராத, மானிய விலையிலான டீசலை விழுப்புரம் மாவட்டத்திலேயே மீனவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் டீசல் பங்க் அமைத்துத் தராத, சிப்காட் வளாகம் அமைப்பதற்காக ஏழை, எளிய மக்களின் விளை நிலங்களை கையகப்படுத்த நினைக்கின்ற தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வலியுறுத்தியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், 13.2.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில், கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று வரை கோரிக்கை வைக்கும் நிலையில் இருந்த நீங்கள்,

எங்களின் ஓட்டால் இன்று செயல்படுத்தும் நிலையில் உள்ளீர்கள்.

தாயுள்ளம் கொண்டு எங்களின் கோரிகையை

நீங்களாவது நிறைவேற்றுவீர்கள்  என்று பெரிதும் நம்புகிறோம்

Advertisements