”வீடு கிடைக்குமா?”


சின்னமுதலியார் சாவடி ஏக்கம் -”வீடு கிடைக்குமா?”

‘முதல்வரய்யா காப்பாத்துங்க!’ என்ற தலைப்பில் 31-10-10 ஜூ.வி. இதழிலும், ‘கடலால் அரித்த வீடுகளைக் கட்டுவது எப்போது?’ என்ற தலைப்பில் 27.2.11 தேதியிலும் தொடர்ந்து எழுதி வந்த பிரச்னைகளில் ஒன்று, விழுப்புரம் மாவட்டம் சின்ன முதலியார் சாவடியைப் பற்றியது. அந்தக் கிராமத்தில் ஏற்பட்ட  கடல் அரிப்பால்,  மக்கள் படும் அல்லல்களை அதில் சுட்டிக்காட்டி இருந்தோம். அவர்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள், இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை என்பதை விளக்கமாகச் சொல்லி இருந்தோம்.

ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு, மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே இல்லை.

”கடல் அரிப்பால் கிட்டத்தட்ட 100 வீடுகளை இழந்து விட்டோம். மீன் பிடிக்கப் பயன்படுத்தும் படகுகளைநிறுத்தி வைக்கவும் இடம் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. கடைசி​யாக, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் (இப்போதைய பள்ளிக்கல்வி அமைச்சர்) சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையிலாவது எங்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா? எங்களுக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. கதவு சரியில்லை என்று நாங்கள் கூறினோம். அதை மாற்றிவிட்டு விரைவில் உங்களிடம் ஒப்படைக்கிறோம்னு சொன்னாங்க. பல மாதங்கள் ஆகியும் வீடுகளை ஒப்படைக்கவில்லை. கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சியின் போதுதான், எங்கள் பக்கத்துக் கிராமமான தந்தரா குப்பத்தில் கற்களைக் கொட்டி கடல் அரிப்பைத் தடுத்தாங்க. எங்கள் பகுதியிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது… அதேபோன்று நடவடிக்கைத் தேவை!” என்று மீனவர்கள் கவலை தெரிவித்தார்கள்.

இது குறித்து, வானூர் எம்.எல்.ஏ. ஜானகிராமனிடம் பேசினோம். ”சின்ன முதலியார் சாவடி மக்களுக்காக, அ.தி.மு.க. சார்பில், கடந்த ஐந்து வருடங்களில் பல போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். நாங்கள், இப்போதுதான் பதவி ஏற்று, அவரவர் ஏரியாவுக்கு வந்து இருக்கிறோம். அதிகாரிகளுடன் உடனடியாகப் பேசுகிறேன். இன்னும் ஒரு மாதத்துக்குள், வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். நடக்கவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், சின்ன முதலியார் சாவடி மீனவர்களின் கோரிக்கையை அம்மா கவனத்துக்கு கொண்டு செல்வேன்…” என்றார்.

பல வருடங்களாக சின்ன முதலியார் சாவடி மீனவர்கள் கண்ணீரில்தான் மிதந்து கொண்டு இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய அரசாவது கண்ணீரைத் துடைக்குமா?

Advertisements