வெற்றி வாய்புள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் (அணைத்து கட்சி)


வெற்றி வாய்புள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் (அணைத்து கட்சி)

‘ராஜபக்ஷேவின் நண்பேன்டா’ புகழ் கே.அசன் அலி, காங்கிரஸ் வேட்பாளர். இவர் எம்.எல்.ஏ-வாக இருந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதி மீனவர்கள் சிங்களக் கடற்படையிடம் உதைபட்டதுதான் மிச்சம். மீனவர்கள் வாக்குகள் இவருக்கு இல்லை. எனவே, இவரை எதிர்ப்பவரான அ.தி.மு.க. கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெம்பாக உள்ளார். இஸ்லாமியர் வாக்குகளும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்க… அ.தி.மு.க-வின் ஆதரவும் அமோகம். காங்கிரஸ் எதிர்ப்பும் ம.தி.மு.க.வினரின் மறைமுக ஆதரவும் ஜவாஹிருல்லாவை ஜெயிக்கவைக்கும்!

காங்கிரஸ் சார்பாக ஜெ.விஜய இளஞ்செழியனும், மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எ.அஸ்லம் பாட்ஷாவும் களத்தில் போட்டி போடுகிறார்கள். காங்கிரஸ் போட்டி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பாலூர் சம்பத் கணிசமான வாக்குகளைப் பிரிக்கிறார். இதனால், விஜய இளஞ்செழியனுக்கும் பாலூர் சம்பத்துக்கும் கடுமையான போட்டி…  இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது என்பதில்.  அ.தி.மு.க. கூட்டணி சார்பாகக் களத்தில் நிற்கும் அஸ்லம் பாட்ஷாவுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டக் காற்று!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கோடீஸ்வரரான ஷேக் தாவூதை எதிர்த்துக் களத்தில் நிற்பவர் அ.தி.மு.க-வின் கே.ஏ.ஜெயபால். தொகுதிக்குள் நல்ல அறிமுகமானவர். நிரந்தரமான கட்சி வாக்குகள் இவருக்கு இருக்கிறது. ஆனால், தொகுதியில் இருக்கும் சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள்தான் இவர் வயிற்றைக் கலக்குகிறது. ஜமாத்தில் பேசி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறும் முயற்சியில் இருக்கிறார் ஷேக் தாவூது. அதனை நேர் செய்ய, கிராமப்புறங்களில் கடுமையாக வேலை பார்க்கிறது அ.தி.மு.க. இருவருமே சம பலத்தில்  இருந்தாலும், ஜெயபால் கரையேறவே வாய்ப்பு!

தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்ற அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, தன் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், அவரது தம்பி ராஜ்குமாரை சமாளிக்கவே பெரும் பாடுபடுகிறார்.  ஏற்கெனவே இவரிடம் தோற்ற அ.தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.ரங்கசாமியே மீண்டும் எதிர்த்துப் போட்டியிடுகிறார். அனுதாப வாக்குகள், எதிர்ப்பு காட்டும் பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள், கூட்டணிக் கட்சிகள் என அனைத்தும் ரங்கசாமிக்கு ஆதரவான விஷயங்கள். ஆனாலும் உபயதுல்லா​வால் எந்தத் தொந்​தரவும் இல்லை என்று நினைத்து வெற்றி பெறவைப்பார்கள் தொகுதிவாசிகள்!

இடைத் தேர்தலில் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வின் எஸ்.எஸ்.கவுஸ் பாஷாவும், தே.மு.தி.க. மாநிலப் பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜனும் இங்கே மோதுகிறார்கள்.  ரேஷன் கடையில் வேலை பார்த்து படிப்படியாக வளர்ந்தவர் கவுஸ் பாஷா. ‘கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்த கவுஸ் பாஷாவை எப்படியாச்சும் ஜெயிக்கவைக்கணும்’ என்று உடன்பிறப்புகள் துடிக்கிறார்கள். ஆனால், சுந்தர்ராஜனுக்குக் கூட்டணி பலமாகக் கை கொடுக்கிறது. அப்பாவியாக வலம் வருபவரை மக்கள் அன்போடு வரவேற்பதைப் பார்த்தால், சுந்தர்ராஜனுக்கே சுபிட்சம்!

பல தேர்தல்களில் காங்கிரஸ் கைவசம் இருந்த தொகுதி இது. இப்போது தி.மு.க-வின் அமைச்சர் சுப.தங்கவேலன் நிற்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில், தே.மு.தி.க-வின் எஸ்.முஜிபுர் ரகுமான் நிற்கிறார். இவர் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் என்பதாலேயே, பாதி வெற்றியைத் தொட்டுவிட்டார் தங்கவேலன்.  கடற்கரையோர முஸ்லிம் வாக்குகள் முஜிபுரை வெற்றியடையவைக்கும் என நம்பினர். ஆனால், தொகுதியில் கணிசமான படையாச்சியினருக்கும் முஸ்லிம்​​​களுக்கும் ஊருக்கு ஊர் வம்பு வழக்குதான். இதனால், முஜிபுருக்கு எதிராகப் படையாச்சிகளின் வாக்குகள் தாமரைக்குப் போக… இறுதியில், தங்கவேலனே வெல்வார்!

தி.மு.க. சார்பில் இரண்டு முறை வெற்றி பெற்ற அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் இந்த முறையும் களத்தில் நிற்கிறார். தொகுதியில் முஸ்லிம்களும் அரசு ஊழியர்களும் கணிசமாக இருப்பதால், தனது கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் வசம் தொகுதியைத் தள்ளிவிட்டது அ.தி.மு.க. தோழர் பழனியைக் களம் இறக்கிய காம்ரேட்கள், தேர்தல் வேலைகளில் விறுவிறுப்பு காட்டி வந்தாலும், வெற்றிக் கனி மைதீன்கான் பக்கமே இருக்கிறது!

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் எஸ்.அப்துல் ரஹீமை எதிர்த்து நிற்பவர் காங்கிரஸின் ஆர்.தாமோதரன். அப்துல் ரஹீம், ஆவடி நகராட்சித் துணைத் தலைவர், நகர அ.தி.மு.க. செயலாளர் எனப் பலம் நிறைந்தவர். தொகுதிக்குப் புதியவரான தாமோதரன், மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவே படாதபாடு படுகிறார். போதாக்குறைக்கு, கூட்டணிக் கட்சியினரும் கை கழுவிவிட்டதால், தனியே தடுமாறுகிறார். இவர்களுக்கு இடையே கரன்ஸியை அள்ளி இறைத்தே வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கிறார் ஜாக் டி.வி. ஜெயராமன். எத்தனை சிக்கல்கள் வந்தாலும், தடை​களைத் தாண்டி இலையே துளிர்க்கிறது!

அ.தி.மு.க-வின் பழ.கருப்பையாவுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அல்தாப் உசேனுக்கும் கடும் மோதல். இஸ்லாம் சமூகத்தவர்களும், மார்வாடிகளும்தான், யார் கோட்டைக்குப் போவது என்பதைத் தீர்மானிக்க இருக்கிறார்கள். பழ.கருப்பையாவின் க்ளீன் இமேஜ்… மார்வாடிகளின் ஜெயலலிதா பாசம்… கூட்டணிக் கட்சிகளின் கடுமையான உழைப்பு போன்றவை இரட்டை இலைக்கே சாதகமாக இருப்பதால்… வெற்றிப் பழ(ம்) கருப்பையாவுக்கே!

ஸ்டாலினின் நிழல் என்று கூறப்படும் அசன் முகமது ஜின்னாதான் இங்கு தி.மு.க. வேட்பாளர். சரிக்குச் சமமாக மல்லுக்கு நிற்கிறார் அ.தி.மு.க-வின் பா.வளர்மதி. ‘நான் போட்டியிட்டால், எப்படி உழைப்பீர்களோ… அந்த அளவுக்கு ஜின்னாவுக்கும் இருக்க வேண்டும்’ என்று உடன்பிறப்புகளை உசுப்பி இருக்கிறார் ஸ்டாலின். வளர்மதியின் பிரசார வேகத்தைப் பார்த்து உடன்பிறப்புகள் மிரண்டுகிடக்கிறார்கள். வீடு, வீடாகப் புகுந்து விளையாடுகிறார் வளர்மதி. சுயேச்சையாக ஒரு வளர்மதி நின்று வாக்குகளைப் பிரிக்கிறார். கடைசி நேரக் கவனிப்புகளால் ஜின்னா… வின்னர் ஆவார்!

கருணாநிதி ‘கா’ விட்ட தொகுதி. தி.மு.க-வின் ஜெ.அன்பழகனும், மனிதநேய மக்கள் கட்சியின் எம். தமிமுன் அன்சாரியும் மோதுகிறார்கள். உதயசூரியனுக்குக் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் அரசு ஊழியர்கள் இங்கு நிறைந்திருப்பது தி.மு.க-வுக்குப் பலம். முதல்வரின் தொகுதியாக இருந்தாலும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சரிக்குச் சமமாக இஸ்லாமியர்களின் வாக்குகளை லபக்கிக்கொள்வார் தமிமுன் அன்சாரி. அடிப்படை வசதி இன்றி அல்லாடும் நடுநிலை வாக்காளர்கள் தி.மு.க. மீது வெறுப்புடன் இருப்பதால், தமிமுன் அன்சாரி பார்டரில் பாஸ் ஆகிறார்

தி.மு.க. மாவட்டச் செயலாளர் மற்றும் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான ஆர்.காந்தி மறுபடியும் கேட்டு வாங்கி நிற்கும் தொகுதி. வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என்ற குறை தொகுதிக்குள் சுழன்றுகிடக்கிறது. இவரை எதிர்த்துக் களத்தில் இறங்கி இருக்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த அ.முகம்மது ஜான். இவருக்குக் கட்சியிலும் மக்களிடமும் செல்வாக்கு இல்லை என்பதால், ரத்தத்தின் ரத்தங்களே சோர்ந்துகிடக்கிறார்கள். தே.மு.தி.க. உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும் இவரைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால், மீண்டும் காந்திக்கே ஜெயம்!

சிட்டிங் எம்.எல்.ஏ-வான முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எச்.அப்துல் பாசித் மீண்டும் களத்தில் நிற்கிறார். சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்பதுடன், தொகுதி எங்கும் சாக்கடை, குடிநீர், சாலை விவகாரங்கள் என்று சுழன்று அடிக்கிறது. இந்த முறை தி.மு.க-வுக்கு ஸீட் வேண்டும் என்று கோரிய நிர்வாகி ஒருவர் உள்ளடி வேலைகளில் ஈடுபடுவதும் அப்துல் பாசித்தை அதிரவைக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் கோ.வி.சம்பத் குமாருக்கு தொகுதியில் செல்வாக்கு இல்லை என்றாலும், கூட்டணி வாக்குகள் கை கொடுக்கும். அப்துல் பாசித் மீதான அதிருப்தியால் வெற்றி மாலை சூடுகிறார் சம்பத் குமார்!

கோஷ்டி கும்மாங்குத்தால் துண்டாடிய காங்கிரஸ் மோதலில் கடைசியாக நின்றவர் ஆர்.சையத் கயாஸ் உல் ஹக். முன்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட ஹசீனாவின் கணவர். சார் ‘வெளியூர்க்காரர்’ என்பதால், பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் முறுக்கிக்கொண்டார்கள். தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான செங்குட்டுவன் மீதும் மக்களுக்குக் கடும் அதிருப்தி. அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், எம்.பி-யுமான கே.பி.முனுசாமி ரொம்பவே பிரபலம். அதிரடியான ஆள் என்றாலும், களப் பணியில் ஷார்ப். கே.பி.முனுசாமிதான் வெற்றி சாமி!

அ.தி.மு.க. சார்பில் இரா.குமரகுரு களத்தில் உள்ளார். ஏற்கெனவே, திருநாவலூர் தொகுதியில் வென்றவர். தொகுதி மறுசீரமைப்பில் அது காணாமல் போக… சொந்த ஊரான உளுந்தூர்பேட்டையில் நிற்கிறார். மக்களிடம் நன்கு பழகுபவர். தொகுதி மக்களை ஓயாமல் சந்தித்து வருகிறார். இவருக்கு எதிராக நிற்பவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகம்மது யூசுப். இவரும் அமைதியானவர், அன்பானவர் என்ற பெயர் எடுத்தவர்தான். என்றாலும், தொகுதி முழுவதும் அறிமுகம் இல்லாதது பெரிய மைனஸ். மேலும், தொகுதியில் அ.தி.மு.க-வினர் அதிகம் என்பதால், குமரகுருவுக்கே வெற்றி!

காலாப்பட்டு: மறு சீரமைப்பில் புதிய தொகுதி. காங்கிரஸின் தற்போதைய அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜகான் நிற்கிறார். இவரை எதிர்த்து நிற்பவர் என்.ஆர்.காங்கிரஸில் பி.எம்.எல்.கல்யாண சுந்தரம். ‘ஷாஜகான் அமைச்சராக இருந்தும், எதிர்பார்த்த அளவுக்குத் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை’ என்பது இவருக்கு மைனஸ். கல்யாண சுந்தரத்துக்கோ, கூட்டணி கை கொடுக்கவில்லை. பண பலத்தால் ஷாஜகான் வெல்கிறார்

நன்றி : ஜு வி

Advertisements