நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?


நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

 

தேர்தல் நெருங்கிவிட்டது. வாக்களிக்க வேண்டிய திசைகள்

குறித்துப் பேசுகிறார் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பேராசிரியர் அ.மார்க்ஸ்.

”நம்முடைய தேர்தல் முறை விநோதமானது. 32 சதவிகிதம் வாக்கு பெற்ற கட்சி ஆட்சிக்கு வருவதும், 29 சதவீதம் வாக்கு பெற்ற கட்சி நான்கைந்து இடங்களில் மட்டுமே வெல்வதும், இன்றைய தேர்தல் முறையின் நிதர்சனம்.

ஒரு தொகுதியில் வாக்கு வங்கிகளாகக் குவிந்து இருக்க இயலாத மக்கள் பிரிவினர், ஏதேனும் பெரும் கட்சிகளைச் சார்ந்து இராமல் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பு இல்லை. இதனால்தான் முஸ்லிம்கள், தலித்துகள், குறிப்பாக அருந்ததியர்கள், பழங்குடியினர் போன்றோர் அவர்களுக்கு உரிய விகிதத்தில் சட்டப் பேரவையில் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.

மேலும் நமது தேர்தல் முறையில் பணம் மற்றும் சாதி செல்வாக்கு மூலம் வெற்றி பெறுபவர்கள் ஊழல் புரியும்போதும், தொகுதி மக்களுக்குத் துரோகம் இழைக்கும் போதும், அவர்களைத் திரும்ப அழைக்கிற உரிமையும் இங்கு மக்களுக்குக் கிடையாது. இவற்றால்தான் நான் வாக்கு அளிப்பது இல்லை.

ஆனாலும் வாக்களிப்பதில் உறுதியாக இருப்பவர்களுக்கு கீழ்க்கண்ட ஆலோசனைகளைச் சொல்கிறேன்…

உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் பொருளாதாரத் துறை பெரிய அளவில் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு திறந்துவிடப்படுகிறது. நீர் மற்றும் கனிம வளம் உள்ள நிலங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளி வழங்கப்படுகின்றன. தங்கள் உரிமைகள் பறிபோவதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் மக்கள் மீது கடும் அடக்குமுறை ஏவப்படுகிறது. இந்தப் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாத கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன. மீண்டும் அதே இடத்தில் மசூதியைக் கட்டித் தருவதாக உறுதி கூறுபவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.

தலித் கிறிஸ்துவர்கள், அருந்ததியர்கள் ஆகியோருக்கு, தேசிய அளவில் உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்று கூறுபவர்களுக்கும், முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்துள்ள ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளிப்பவர்களுக்குமே ஆதரவை நல்க வேண்டும்.

இந்தியாவிலேயே அதிகச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்படுவதில் தமிழ்நாடுஇரண்டாவது இடம் வகிக்கிறது. கார்ப்பரேட்டுகள் நேரடியாக நிலம் வாங்குவதுடன், அரசு நிறுவனமான சிப்காட் மூலம் ஏழை எளிய அப்பாவி மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. ‘சிப்காட் மூலம் நிலம் பறிப்பு செய்வதை நிறுத்துவோம், ஏற்கெனவே பறித்ததைத் திருப்பிக் கொடுப்போம்!’ என்று உறுதி கொடுக்கிற அரசியல் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும்.

என்கவுன்ட்டர் கொலைகளை ஊக்குவிக்கும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துகளுக்கு சமீபத்திய ஜப்பான் சம்பவங்களே சான்றுகள். புது அணு உலைகளை உருவாக்குவது இல்லை, நமது அணு ஆற்றல் கொள்கை மறு பரிசீலனை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கும் கட்சிகளுக்கே ஆதரவு அளிக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் சிங்காரச் சென்னை என்ற பெயர்களில் கூவம் மற்றும் அடையாறு பகுதியில் குடியிருந்த சுமார் ஒரு லட்சம் மக்கள், துரைப்பாக்கம் போன்ற வசதிகளற்ற இடங்களுக்குக் குடிபெயர்க்கப்பட்டு இருக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்களை இடம் பெயர்க்கவில்லை எனவும் ஏற்கெனவே இடம் பெயர்க்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதாரங்கள் அளிக்கப்படும் என்று உறுதி அளிப்போருக்கும் வாக்களிக்க வேண்டும்.

இலவசங்களைப் பெறுவதன் மூலம் ஆட்சியாளர்களின் ஊழலில் மக்களும் பங்குதாரர்களாக மாற்றப்படுகின்றனர். அதற்குப் பதிலாக, அவற்றைத் தாமே பெற வல்லவர்களாக மக்களை மாற்றி அமைக்கும் பொருளாதாரத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவேண்டும்.

ஜனநாயகத்தின் ஆகப் பெரிய களங்கம் வாரிசு அரசியல்தான். வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் தகுதியானவர்கள் முக்கிய நிலைகளுக்கு வருவது தடுக்கப்படுகிறது. வாரிசு அரசியலுக்கு வாய்ப்பு அளிக்காத அரசியல் கட்சிகளுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், ஈழப் பிரச்னை அவர்களுடைய உணர்வுகளுடன் சம்பந்தப்​​​பட்டமிகவும் அடிப்​படையான ஒன்று. மிக மோச​மான இனப் படுகொலை அங்கே நிகழ்த்தப்பட்டு, லட்சக்கணக்கான தமிழ் மக்களது அடிப்​படை வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கான அரசி​யல் தீர்வு ஒன்றை வழங்குவதற்கு ராஜபக்ஷே அரசுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ள அரசியல் கட்சிகளுக்​கே ஆதரவு அளிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழ அகதிகள் எந்தக் குறைந்தபட்ச வசதிகளும் இன்றி முகாம்களில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகை, கால் வயிறு நிரம்பக்கூட பயன்படாது. கிட்டத்தட்ட சிறைச்சாலை போல, முகாம்கள் க்யூ பிரிவு போலீஸாரால் கண்காணிக்கப்​படுகின்றன. இந்த நிலை ஒழிக்கப்பட வேண்டும்.

தமிழகச் சிறைகளில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆயுள் கைதிகள் சுமார் 2,000 பேர் கடந்த ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால், முஸ்லிம் கைதிகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்துக் கைதிகளுக்கும் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும். 14 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள எல்லாக் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். போதிய அளவில் முஸ்லிம்கள், தலித்துக்கள், பழங்குடியினர், மீனவர்கள் ஆகியோர் உரிய அளவில் சட்டமன்றத்தில் இடம் பெறத்தக்க அளவில் இவர்களில் தகுதியானவர்களைக் கட்சி வேறுபாடு இன்றி. மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் வெளிநாட்டு மது என்கிற பெயரில் சாராயக் கடைகளைத் திறந்து, கள்ளுக் கடைகளை மூடிவைத்து இருப்பது எந்த வகையிலும் பகுத்தறிவுக்குப் பொருந்தக்கூடிய செயல் அல்ல. ‘கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும்’ என்கிற தென்னை மற்றும் பனை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பவருக்கே வாக்களிக்க வேண்டும்.

நான் குறிப்பிட்டுள்ள அடிப்படைக் கோரிக்கைகள் எல்லாவற்றையும்கூட அல்ல, பெரும்பாலானவற்றைக்கூட நிறைவேற்றத்தக்க அரசியல் கட்சிகளுக்கே உங்கள் வாக்குகளை அளியுங்கள்!”

 

நன்றி : ஜூ வி


Advertisements