கடலால் அரித்த வீடுகளைக் கட்டுவது எப்போது?


கடலால் அரித்த வீடுகளைக் கட்டுவது எப்போது?

‘முதல்வரய்யா காப்பாத்துங்க!’ என்ற தலைப்​பில் கடந்த 31.10.10

ஜூ.வி-யில், விழுப்புரம் மாவட்டம் சின்ன முதலியார் சாவடி கிராமத்தில் கடல் அரிப்பால் 90-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விட்டதாகவும், நான்கு வருடங்களாகப் போராடியும் பலன் இல்லை என்றும் சொல்லி இருந்தோம். அப்போது கலெக்டர் பழனி​சாமி, ‘இன்னும் ஒரு மாதத்துக்குள் நிரந்தரத் தீர்வு காண மீனவர்களுக்கு 263 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த வீடுகள் அடுத்த மாதம் (கடந்த நவம்​பர்) பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்’ என்று பதில் சொல்ல… அதையும் வெளியிட்டு இருந்தோம். ஆனால், கலெக்டர் சொன்ன நவம்பர் போய் இரண்டு மாதங்கள் முடிந்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!

அதனால் வீடுகளைப் பறிகொடுத்து தத்தளிக்கும் அந்த மீனவ மக்கள் பல போராட்டங்களைதொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  சமீபத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை சேதத்தைப் பார்வையிட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வந்தார். அவர் புதுவை வழியாக சென்னை செல்லும்​போது, சின்ன முதலியார் சாவடி கிராமத்தையும் பார்வையிடுவதாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால், ‘துணை முதல்வரிடம் நேரில் சொன்னால் தீர்வு கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கிராம மக்கள் ஸ்டாலினை வரவேற்று பேனர்கள், கொடிகள் கட்டி அமர்க்களப்படுத்தி இருந்தனர். ஆனால், ஸ்டாலினோ அந்த கிராமத்தின் பிரதான சாலையில் காரை நிறுத்தி, வரவேற்பை மட்டும் பெற்றுக்கொண்டு இரண்டே நிமிடத்தில் மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மக்கள் பேனர், கொடிகளை கிழித்து ஆவேசமானார்கள்.

இந்நிலையில், அந்த மக்களுக்காக களம் இறங்கிய அ.தி.மு.க-வினர் கோட்டக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம், ”தங்கள் உயிரையே பணயம் வைத்து மீன் பிடித்து வயிற்றைக் கழுவும் இந்த மக்களை ஆளும் அரசு உதாசீனப்படுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக கைது செய்யப்பட்டிருக்கும் ஆ.ராசாவைத் தொடர்ந்து கனிமொழி, தயாளு அம்மாளும் கைது செய்யப்படுவார்கள். பிறகு கருணாநிதியும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் களி சாப்பிட வேண்டும். அதை நாம் நிச்சயம் பார்க்க வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டது… மீண்டும் அம்மா தலைமையில் ஆட்சி அமைப்போம். ஆட்சி அமைந்தவுடன் அம்மாவின் கவனத்துக்கு இந்த கிராம மக்களின் பிரச்னையைக் கொண்டுசென்று, போர்க்கால நடவடிக்கை எடுப்பேன்!” என கொளுத்தும் வெயிலில் தி.மு.க-வை வறுத்தெடுத்தார்.

‘சொன்னது என்னாச்சு?’ என்று கலெக்டர் பழனிசாமியை மீண்டும் தொடர்பு கொண்டோம். ”அந்த வீடுகளில் கதவு சரியாக இல்லை என்று புகார் வந்தது, அதனால் அதனை சரி செய்துவருகிறோம். விரைவில் ஒப்படைத்துவிடுவோம்!” என்றார்.

விரைவில்னா என்னங்க அர்த்தம்?

SOURCE: JUNIOR VIKATAN

Advertisements