அழிவின் விளிம்பில் பாண்டிச்சேரி மக்கள்


அழிவின் விளிம்பில் பாண்டிச்சேரி மக்கள்

 

பாண்டிச்சேரி கெம்பாப் ஆலையில்

பாண்டிச்சேரி கெம்பாப் ஆலை விஷவாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சி

 

றக்க முடியுமா? போபால் விஷவாயு படுகொலைகளை!

போபால் விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட கொடூரங்களை நம்மில் எவரும் மறந்திருக்க மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் (இரண்டாம் தலைமுறையினர்) அதன் கொடூரத்தை தனது கருவிலிருந்தே சுமக்கின்றனர். இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இது தொடரும் என்று தெரியவில்லை.

ஆனாலும் மக்கள் விரோத அரசாங்கமோ இது போன்ற ஆலைகளைத் தடை செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறது. “இது போன்ற பேரழிவுகளை விபத்து என்றும், எதிர்பாராமல் நடைபெறும் இவைகளுக்கு பாதுகாப்பு வழிகளை சரி செய்து கொண்டால் விபத்தினைத் தவிர்த்து விடலாம்; நாட்டுக்குத் தேவையானதை உற்பத்தி செய்ய வேண்டுமல்லவா?” என்றெல்லாம் சில அறிவுஜீவிகள் கூறுகின்றனர்.

இது விபத்தா? ஒரு விபத்தின் மூலம் முதலாளித்துவம் பாடம் கற்றுக் கொள்ளுமா? நாட்டின் தேவை என்பது உண்மையில் யாருக்கானது?

அழிவின் விளிம்பில் பாண்டிச்சேரி மக்கள்

போபால் போன்று ஒரு பெரும் அழிவுக்கு உட்பட வேண்டிய நிலையிலிருந்து பாண்டிச்சேரியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் தப்பித்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல‌. இது வெறும் பீதியூட்டலோ, ஊதிப்பெருக்கி வெறுப்பைக் காட்டுவதற்காகவோ இதனைக் குறிப்பிடவில்லை.

கடந்த ஜனவரி 26 அன்று காலை சுமார் 7-30 க்கு குடியரசு தின‌ அணிவகுப்புகளும் கலைநிகழ்சிகளும் பாண்டிச்சேரியின் கடற்கரையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும்போது பாண்டிச்சேரியின் இன்னொருபுறம் காலாப்பட்டு என்ற இடத்திலுள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு அரசு பொது மருத்துவமனையை நோக்கிச் சென்றுள்ளனர்.

பாண்டிச்சேரி கெம்ஃபாப் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் வி.ஆர். ரகுராமன் கூறுவதைப் படியுங்கள்.

“குளோரின்  வாயுவைக் கொள்கலனுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத‌விதமாகக் கசிந்துள்ளது. இவ்வாறு கசிவு ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் “குளோரின் உணர்கருவி” அன்று வேலை செய்யவில்லை. ஆனாலும் அங்கு வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளி அதை உணர்ந்து எச்சரிக்கை செய்துவிட்டு உடனடியாக அதை நிறுத்தி விட்டார். இரண்டு நிமிடங்களில் தவறு கண்டுபிடிக்கப்பட்டு கசிவை தடுத்து நிறுத்தி விட்டோம். காற்று சற்று பலமாக இருந்ததால் தென்பகுதியில் கொஞ்சம் பரவி விட்டது.”

பாண்டிச்சேரி கெம்பாப் ஆலை விஷவாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சிமருத்துவமனைக்கு தூக்சிச் செல்லப்படும் தொழிலாளி

கெம்ஃபாப் அல்காலிஸ் லிமிடெட் (Chemfab Alkalis Limited) ,  பாண்டிச்சேரியிலுள்ள காலாப்பட்டு என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் கெமிக்கல் ஆலை இது. நாளொன்றுக்கு 106 டன் காஸ்டிக் சோடாவும், சுமார் 90 டன் திரவ குளோரினும், ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஹைட்ரோ ஹைப்போ குளோரைட், ஹைட்ரஜன் வாயு போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு இதேபோல‌ பெரிய கெமிக்கல் ஆலை ஒன்று கடலூரில் உள்ளது. பாண்டிச்சேரி தவளக்குப்பம் என்னுமிடத்தில் இவர்களுக்குச் சொந்தமான ஒரு ஆலையும் பிரச்சினையால் மூடப்பட்டுவிட்டது.

போபால் விஷவாயுக் கசிவு எதனால் ஏற்பட்டது? கொள்கலனுள் வைக்கப்பட்ட மிதைல் சயனேட் என்ற வாயு குளிரூட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். அந்த குளிரூட்டும் எந்திரம் பழுதாகி வேலை செய்யவில்லை. தொழிலாளர்கள் இதனை முறையிட்டும் நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. சில டிகிரி வெப்பம் ஏற கொள்கலன் வால்வுகள் வெடித்து விஷவாயு வெளியேறி விட்டது. பல இலட்சம் மக்களின் வாழ்க்கையே அழித்தொழிக்கப்பட்டு விட்டது.

கெம்ஃபாப் நிறுவனத்திலுள்ள எச்சரிக்கை மணி குளோரின் கசிந்தால்தான் வேலை செய்யும். அதனால் அது வேலை செய்கிறதா இல்லையா என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. எதேச்சையாக அந்த தொழிலாளி கவனித்து விட்டதால் (அதுவும் இரண்டு நிமிடத்தில்) வால்வை அடைத்து நிறுத்தி விட்டார். காற்றின் போக்கு தொழிலாளியின் பக்கமாக திரும்பியிருந்தால், தொழிலாளி முதலில் மயக்கமடைந்து இங்கும் ஒரு போபால் நிகழ்ந்திருக்கும். இது வெறும் பீதியூட்டல் இல்லை. இரண்டே நிமிடம்தான் என்று சொல்ல ரகுராமன் கூட உயிருடன் இருந்திருக்க முடியாது.

பழுது பார்க்கச் சொன்னதையே பழுது பார்க்காத மூலதனம் பழுதா இல்லையா என்று தெரியாததை பழுது பார்க்குமா? முதலாளித்துவத்தின் இலாப விதிதான் அதனை அனுமதிக்குமா? அப்படி முறையாக பராமரித்திருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

இரண்டே நிமிடம்தான் என்றுச் சொல்லியுள்ளார் ரகுராமன். அந்த இரண்டு நிமிடக் கசிவு அருகிலுள்ள மரஞ்செடி கொடிகளின் இலைகளை பொசுக்கி விட்டது. அருகிலுள்ள‌ குடியிருப்புகளில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைசுற்றலும் குமட்டலும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை பதிவுப்படியே 395 பேருக்கு பாதிப்பு என்று தினமலர் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. அதில் குழந்தைகள் 13 பேர்.

இந்தத் தொழிற்சாலையில் இருந்து ஏழு கிலோமீட்டர் சுற்றளவிலேயே பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துமனை, புதுவை பல்கலைக்கழகம், புதுவை பொறியியல் கல்லூரி. புதுவை சட்டக் கல்லூரி போன்றவை அமைந்துள்ளன. அந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள‌ நான்கு ஊர்களின் மக்களையும் சேர்த்தால் 30,000- பேர் இப்பகுதியிலேயே வசிக்கிறார்கள்.

இது மக்கள் அரசாங்கமா?

புதுநகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இதுகுறித்த தகவலை தெரிவிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். மக்களின் நண்பர்களான போலீசு “நீ ஒருவன்தான் ஊரில் இருக்கியா, போயா போய் உன் வேலையைப்பாரு” என்று விரட்டி விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் பயந்துபோய் அரசு பொது மருத்துவமனைக்கும், அருகிலுள்ள பாண்டிச்சேரி….(பிம்ஸ்)….. என்ற தனியார் மருத்துவமனைக்கும் பதறியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். கருணைமிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் “காசு வாங்குவதற்காக சும்மா நடிக்கிறீர்களா?” என்று மக்களைக் கேவலப்படுத்தியுள்ளனர். மேலும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், புறநோயாளியாக வைத்திருந்து முதலுதவி மாத்திரம் செய்து அவர்களை அவசர அவசரமாக வெளியே விரட்டியுள்ளனர்.

மக்கள் அரசாங்கமாகவும், மருத்துவர்கள் அதன் ஊழிய‌ர்களாகவும் உண்மையாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? மருத்துவமனைக்கு வந்த மக்களுக்கு முறையான உடனடி தீவிர சிகிச்சையும், பாதிக்கப்பட்ட இடத்திற்கு மருத்துவக்குழுவாக சென்று அங்குள்ள அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியும் இருக்க வேண்டும். முதலாளிகளைக் காப்பாற்றி அவர்கள் போடும் எலும்புத் துண்டுக்காக அலைபவர்களிடம் இதனை நாம் எதிர்பார்க்கலாமா?

விபத்து நடந்த பிறகும் வழக்கம் போல அரசு எந்திரங்கள் எதன் மீதோ பெய்த மழையாக இருக்க, பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதும் ஓடோடி வந்தது அரசு. 144 தடையுத்திரவை பிறப்பித்து ஆலைக்கு அரண் அமைத்து அங்கே மறியலில் ஈடுபட்ட மக்களை கலைத்துள்ளனர்.

1990 களிலும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பும் இதே போல விபத்து இந்த ஆலையில் நடந்துள்ளது. இந்த ஆலை வெளியேற்றும் கழிவு நீரால் கடலின் மீன் வளம் பாதிப்படைந்து பலமுறை இப்பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அன்றும் அரசு அதிகாரிகள் ஆலையை மூடி சீல் வைப்பதாக நாடகமாடியுள்ளனர். இன்றும் அதே நாடகம்.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களை ஏமாற்றுவதில் மக்கள் பிரதிநிதிகள், வாழ வழிவிடாத சகோதரன் எழவு வீட்டில் ஒப்பாரி வைப்பது போல ஓடோடி வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் தொழிற்சாலையை மூடி விட்டதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் புளுகி விட்டு கார்களில் பறந்து விட்டனர்.
அன்றாடம் பருகும் நகராட்சி குடிநீரில் கிருமிகள் உள்ளன என்று பன்னாட்டு “அக்வாபினாய’ பருகும் இந்த கன‌வான்கள், மக்கள் வசிக்கும் பகுதியில் ஆபத்தான விஷவாயுத் தொழிற்சாலையை அனுமதித்ததன் மூலம் மக்களின் உயிர்களை மயிரளவுக்கும் மதிக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை.

காலாப்பட்டு எம்.எல்.ஏ.வும், கல்வி அமைச்சருமான ஷாஜகான் (இந்த உத்தமரின் அப்பா பரூக்மரைக்காயர் முதல்வராக இருந்த போதுதான், இந்தக் கொலைகார இரசாயன ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது) இப்படி ஒரு ஆபத்தான இரசாயன தொழிற்சாலை தனது தொகுதியில் இருக்கிறதே; இதில் விபத்து ஏற்பட்டால் நமது தொகுதியில் வாழும் 30,000 மக்களின் உயிர்களும் போய்விடுமே என்ற அக்கறை கொஞ்சமும் இல்லாமல், விபத்து நடந்த நான்காவது நாளே (31-01-2011) தங்கத் தேரிழுத்து, பால்குடம் சுமக்க  விமரிசையாக தனது பிறந்தநாளை காலாப்பட்டில் கொஞ்சமும் அருவெறுப்பின்றி கொண்டாடினார்.

சீல் வைக்கப்பட்ட ஆலைக்குள் இரகசியமாக வேலைகள் நடைபெற்று, 14 டேங்கர் லாரிகளில் குளோரினை நிரப்பி இரவோடு இரவாக அனுப்பியுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு ஆலைக்கு மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். மாவட்ட உதவி ஆட்சியர் அங்கு வந்து, “ஆலையில் உள்ள கெமிக்கல்களைப் பாதுகாக்க சில எந்திரங்கள் தொடர்ந்து இயங்க‌ வேண்டும் என்பதற்காகத்தான் சில எந்திரங்களை இயக்கினர். அது போல கெமிக்கல்களை அப்புறப்படுத்தவே டேங்கர் லாரிகளை அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

சீல் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை அரசாங்கம் கையக‌ப்படுத்திக் கொள்வது சரியானதா? அல்லது அந்த நிர்வாகத்தையே பராமரிக்க அனுமதிப்பதா? குறைந்த பட்சம் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் வெளிப்படையான‌ பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நடப்பதோ முதலாளிகளுக்கான விசுவாசம். முதலாளிகளுக்கான சிறு இழப்பைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் விற்றுக் காசாக்கிக் கொள்ள துணை போகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பான சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஆபத்தான கெமிக்கல்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று எண்ணுவது போன்ற‌ முட்டாள்தனம் வேறில்லை.

கொடூர இரசாயன ஆயுதம் : குளோரின்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரில் குளோரின் மிகச் சிறிய அளவில் கலக்கப்படுகிறது, அதாவது, நமது நகராட்சி மற்றும் பேரூராட்சியால் வழங்கப்படும் குடிநீரில் 5000 லிட்டருக்கு ஒரு மாத்திரை வீதம் கலந்தே நமது வீடுகளுக்கான குடிநீர் குழாய்களில் வழங்கப்படுகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது குளோரின் கலந்த குடிநீர்தான்.

குளோரின் வாயுவின் அளவு காற்றில் 0.2 முதல் 0.5 PPM  வரை இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே, 2 PPM இருந்தால் இருமல், வாந்தி ஏற்படும். 30 PPM இருந்தால் நுரையீரல் பாதிக்கும். 60 PPM இருந்தால் உயிரையே குடித்து விடும். PPM என்பது PARTICLES PER MILLION – அதாவது 10,00,000 காற்று துகள்களில் வெறும் 60 குளோரின் துகள்கள் இருந்தாலே, அது நமது உயிரை குடித்துவிடும். நமது நாட்டின் சுகாதாரத் தேவை மற்றும் சாயப்பட்டறைகளில் துணிகளை பிளீச்சிங் செய்வதற்கு தேவையான அளவுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுதாக அறிய முடிகிறது.

அதிலும் திரவ குளோரின் முழுக்க முழுக்க ஏகாதிபத்தியத்தின் கொலைவெறிக்கு உதவும் இரசாயன‌ ஆயுதங்களை உற்பத்தி செய்யவே பயன்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது குளோரின் நச்சு வாயுவைப் பயன்படுத்தி ஜெர்மனி பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தது. ஈராக் (2007) போரின் போது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கிற்கான குளோரின் சப்ளையை நிறுத்தி 5 இலட்சம் குழந்தைகளைக் கொன்றது, அதாவது. ஈராக் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் கலக்கப் பயன்படும் மிகச்சிறிய அளவிலான குளோரினையும் தடை செய்ததன் மூலம் சுகாதாரமற்ற. குளோரின் கலக்காத குடிநீரை குடித்த ஒன்றுமறியாத 5 இலட்சம் ஈராக் இளம் பிஞ்சுகள் வயிற்றுப்போக்கு மற்றும் காலரா நோயினால் துடிதுடித்து செத்தார்கள்.

திடநிலையிலுள்ள குளோரினையும் தமது ஆயுதமாக ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்த முடியும் என்பதை அறியும்போது முதலாளித்துவம் தன்னை நம்பியுள்ள தன் சொந்த மக்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் காட்டாதா என்ற கேள்வி மனதைச் சுடுகிறது.

எங்களிடம் பேசிய புதுநகரைச் சேர்ந்த பெரும்பாலானோர், ‘சமையல் எரிவாயு உலையில் இருந்து வாயு கசிவதாகவே முதலில் நினைத்தோம்’ என்று கூறினார்கள். ஒருசிலர் பிளீச்சிங் பவுடர் வாச‌னை வந்ததாகவும், அதன்பின் மூச்சுத்திண‌றல் வந்ததாகவும் கூறினர். இதே புதுநகரைச் சேர்ந்த கிருத்திகா “எங்கள் வீட்டின் பின்பக்கத்தில் இருந்து பிளீச்சிங் பவுடர் வாசனை வந்தது. என்ன இது என்று பார்ப்பதற்குள், வீட்டின் பின்பக்கம் இருந்த மரம், செடி கொடிகள் எல்லாம் கருகியது. எனக்கும் தலைசுற்றல் வந்ததால் என் வீட்டுக்காரருடன் மருத்துவமனைக்குச் சென்று விட்டேன்’ என்றார்.

செல்வி என்ற மீன் விற்கும் பெண்  ”இந்த கம்பெனி ஆரம்பிக்கும் போது சோடா கம்பெனி ஆரம்பிக்கிறோம் என்றுதான் சொன்னான்க. இப்ப என்னடான்னா எங்க எல்லாத்தையும் சாவடிச்சுடுவான்க போல’ என்று ஆத்திரப்படுகிறார். ஆண்டாள் என்ற வயதான பாட்டி ‘ஐயா, நாங்க எல்லாம் வாழ்ந்துட்டோம். எங்க புள்ளங்க எல்லாம் வாழ வேணுமில்ல. அதனால, தயவு செய்து இந்த கம்பெனிய எடுத்துடுங்க. வேற எந்த கம்பெனி வேணா வச்சுக்குங்க’ என்று பரிதாபமாக புலம்புகிறார்.

முதலாளித்துவ அரசு மக்கள் நலன் காக்காது என்பது தெள்ளத் தெளிவானது. நம் முன் உள்ள கேள்வி கெம்ஃபாப் போன்ற கொலைகார ஆலைகளை போராடி அகற்றப் போகிறோமா? அல்லது பல ஆயிரக்கணக்கான நம் மக்களை பலிகொடுத்து விட்டு, அய்யோ பாவம் என்று ஒப்பாரி வைக்கப் போகிறோமா? என்பதே.

நன்றி : http://www.vinavu.com

 

 

 

 

Advertisements